காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

அரசியல் சமூக ஊடகம்

சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Karappan 2.png
Facebook LinkArchived Link

காரப்பன் சில்க்ஸ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக பார்க்கிறார் முதலாளி” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பதிவை, Sabari R என்பவர் 2019 அக்டோபர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அத்திவரதர், கிருஷ்ணன் ஆகிய இந்து தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதைத் தொடர்ந்து காரப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காரப்பன் சில்க்ஸில் இந்துக்கள் யாரும் துணி வாங்கக் கூடாது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்தார். இதனால், காரப்பன் மீதும் காரப்பன் சில்க்ஸ் மீதும் அதிகப்படியான ஊடக வெளிச்சம் பாய்ந்தது. வியாபாரம் அதிகரித்துள்ளதாக காரப்பன் பேட்டி அளித்தார்.

Archived Link 1
tamil.oneindia.comArchived Link 2
vikatan.comArchived Link 3 

வழக்குப் பதிவு செய்யவே அதிக அழுத்தம் தர வேண்டியிருந்தது… கைது செய்யவில்லை… விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் பேட்டி உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்த பதிவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்தது என்று யாராவது போலீசில் புகார் செய்துள்ளார்களா, அது பற்றி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Search Link

சிறுமுகை போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு (தொலைபேசி எண் 04254 252 094) பேசினோம். காரப்பன் சில்க்ஸ் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பற்றி தெரிவித்து, இது தொடர்பாக யாராவது புகார் அளித்துள்ளார்களா என்று கேட்டோம். நம்மிடம் பேசியவர்கள், “அவர் தெய்வங்கள் பற்றி பேசியது தொடர்பாக புகார்கள் வந்தன. நீங்கள் குறிப்பிடுவது போல, உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்துள்ளார் என்று எந்த புகாரும் வரவில்லை. 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து காரப்பன் சில்க்ஸ் பற்றி பல வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இது” என்றனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி உடை மாற்றுவதை காரப்பன் பார்க்கிறார் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •