
மாநிலங்களவையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக தி.மு.க வெளிநடப்பு செய்து, அந்த சட்டம் நிறைவேற உதவி செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு, போட்டோ கார்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளிநடப்பு 29 என்று இருப்பதை சிவப்பு வண்ணத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். நியூஸ் அட்டைக்குக் கீழே, “வெளிநடப்பு செய்வது எப்பேர்ப்பட்ட திருட்டுத்தனமான மற்றும் அயோக்கியத்தனமான செயல் என்பதற்கு மிகச்சிறந்த சான்று இந்த மசோதா முடிவு” என்று போட்டாஷாப்பில் எழுதியுள்ளனர். அதற்குக் கீழ், “ஆதரவு 99 Vs எதிர்ப்பு + வெளிநடப்பு 113(84+29)
திராவிட – காங்கிரஸ் – கம்யூனிச கட்சிகளின் சிறுபான்மை கோஷத்திற்கு தலையாட்டி பொம்மைகளாய் ஆமாம் சாமி போட்டதற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!” என்று எழுதப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்தது என்று செய்தி படிக்கும் போது திமுக சிறுபான்மையினர் காவலர்கள் என்று தோன்றும் ! ஆனால் மறைமுகமாக அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கும் துரோகம் கண்ணில் படாது…” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் குறிப்பட்டுள்ள ஆதரவு, எதிர்ப்பு கணக்கும் மாநிலங்களவையில் நடந்த வாக்கெடுப்பையே குறிப்பிடுகிறது.
இந்த பதிவை, “புதிய தமிழ் தேசியம் – New Tamil Nation” என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 31ம் தேதி வெளியிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
மக்களவையில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. இதனால், எந்த கட்சியின் துணையுமின்றி மக்களவையில் எந்த ஒரு மசோதா, சட்ட திருத்தத்தை நிறைவேற்றும் சக்தி பா.ஜ.க-வுக்கு உள்ளது. இந்த நிலையில், முத்தலாக் தடுப்பு கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவையில் பா.ஜ.க நிறைவேற்றியது. இந்த சட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி வீடியோ…
ஆனால், மாநிலங்களவையில் நிலைமை அப்படி இல்லை. இங்கு பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றே எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் பா.ஜ.க உள்ளது. இங்கு எதிர்க்கட்சிகளே பெரும்பான்மையுடன் உள்ளன. இந்த நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஆதரவு அளித்த அ.தி.மு.க இங்கு எதிர்ப்பை தெரிவித்தது.
முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தால் மசோதா நிறைவேறுவதைத் தடுத்திருக்க முடியும். மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 242. வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்தது. இதனால், மாநிலங்கள் அவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்றும்போது அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 236 ஆக குறைந்தது. அருண் ஜெட்லி, காங்கிரஸ் கட்சியின் ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவர், பிரஃபுல் பட்டேல் உள்பட 14 பேர் அன்று விடுப்பு எடுத்திருந்தனர். இதனால், ராஜ்ய சபாவின் பலம் 21 ஆக குறைந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு 109 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதும். மாநிலங்கள் அவையில் (அ.தி.மு.க சேர்த்து) தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 113 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், ஐக்கிய ஜனதா தளம் இந்த மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்தது. இதனால், தேசிய ஜனநாயக கட்சியின் பலம் 107 ஆகக் குறைந்தது. இந்த சூழ்நிலையில் மசோதா தோற்கடிக்கப்படும் சூழல் இருந்தது. மாநிலங்கள் அவையில் விவாதத்தின்போது அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், தே.ஜ.கூட்டணி பலம் 96 ஆகக் குறைந்தது.
வாக்கெடுப்பின்போது, பிஜூ ஜனதா தளம் ஆதரித்து வாக்களித்தது. அ.தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், மசோதாவுக்கு 99 வாக்குகள் கிடைத்தன.
வேறு சில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தராததாலும் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அவைக்கு வராததாலும் மசோதாவுக்கு எதிராக 84 வாக்குகளே கிடைத்திருந்தன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒருவேளை, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த அ.தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்து இருந்தால் மசோதா தோல்வி அடைந்திருக்கும்.
இந்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க வாக்களித்ததா அல்லது வெளிநடப்பு செய்ததா என்று ஆய்வு செய்தோம். அப்போது தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், தி.மு.க உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று, மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் ஆய்வுக்கு எடுத்த ஃபேஸ்புக் போட்டோ கார்டு மற்றும் நிலைத் தகவலில் எந்த இடத்திலும் மக்களவையில் தி.மு.க வெளிநடப்பு செய்து துரோகம் செய்தது என்று குறிப்பிடவில்லை. மாநிலங்களவையில் வெளிநடப்பு என்றே குறிப்பிட்டுள்ளனர்.
நம்முடைய ஆய்வில்,
மக்களவையில் மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து வாக்களித்ததும் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த தகவல் கிடைத்துள்ளது.
மாநிலங்களவையில் அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது உறுதியாகி உள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்று இருந்தால் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்காது என்பது உறுதியாகி உள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க வாக்களித்தது உறுதியாகி உள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மாநிலங்களவையில் முத்தலாக் எதிர்ப்பு மசோதா நிறைவேற பா.ஜ.க-வுக்கு துணை செய்யும் வகையில் தி.மு.க வெளிநடப்பு செய்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க?– ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False

காயத்ரி என்ற போலீஸ் அதிகாரி ஒரு கொடூரனை ஆணுறுப்பில் சுட்டதாக ஒரு முகநூல் பதிவு Viral ஆக ஷேர் செய்யப்படுகிறது. இதன் உண்மை தன்மையை கண்டறியும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன் sir .
https://www.facebook.com/karthika099/photos/a.228893578016069/341787450060014/?type=3&theater