சமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பு மக்களால் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட்டில் நெரிசல் ஏற்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

டோல் பிளாஸாவில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற எந்த நாடும் இல்ல. நம்ம திருச்சி சமயபுரம் டோல்ல பொங்கல் லீவு முடிஞ்சு சென்னை திரும்பும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த பதிவை Ravi Prk என்பவர் 2020 ஜனவரி 20ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தைப் பார்க்கும்போது திருச்சி சமயபுரத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் போல இல்லை. தமிழகத்தில் உள்ள டோல்களில் ஒரு பாதையில் 5-6 டோல் பூத்கள் இருக்கும். ஆனால் இதில் 40, 50 வரிசையில் வண்டிகள் நிற்கின்றன. எதிர்த் திசையில் வரும் வாகனங்களுக்கு டோல் பூத் இல்லை, அந்த சாலை வெறிச்சோடி இருக்கிறது. பொங்கல் உள்ளிட்ட விடுமுறைக் காலங்களில் டோல் பிளாஸாக்கள் வாகன நெருக்கடியால் அவதியுறுவது வாடிக்கை என்பதால் இந்த படம் உண்மையானதாக இருக்கும் என்று நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

திருச்சி சமயபுரம் டோல் பூத்தின் படம் ஏதும் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தோம். அப்போது, இந்து நாளிதழ் வெளியிட்ட பழைய படம், உள்ளிட்ட சில படங்கள் கிடைத்தன. அவற்றில், ஐந்து வரிசை அளவுக்கே டோல் பூத் இருப்பது தெரிந்தது. 

Search Linkthehindu.comArchived Link

இதை உறுதி செய்ய திருச்சி சமயபுரம் டோல் பூத்தின் கூகுள் மேப் படத்தைப் பார்த்தோம்.  நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தின்படி பார்த்தால் சென்னையிலிருந்து திருச்சி செல்ல, திருச்சியிலிருந்து சென்னை செல்ல தனித்தனியாக டோல் பூத் அமைந்திருக்க வேண்டும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு படத்தைப் போன்று மிகப்பெரிய டோல் பிளாஸா இல்லை. அருகில் மிகப்பெரிய சாலையும் இல்லை. சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல, திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்ல சமயபுரத்தில் அந்த ஒரு இடத்தில் மட்டுமே டோல் இருப்பது தெரிந்தது. 

Map Link

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்பதை அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது 2010ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தது. அங்கும் அரசு விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்று திரும்பிய மக்களால் ஏற்பட்ட நெரிசல் என்று குறிப்பிட்டிருந்தனர். 100 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த புகைப்படத்தை Reuters எடுத்ததும் தெரிந்தது.

Search Linkabcnews.go.comsays.com

நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் சீனாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருச்சி சமயபுரம் டோல்கேட் என்று பகிரப்பட்ட படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False