
பிறப்பில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது, என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

எச்.ராஜா ட்வீட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எப்போது இந்த ட்வீட் வெளியிடப்பட்டது என்று இல்லை. ஒரு நாளைக்கு முன்பு என்று உள்ளது. அதில், “பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உள்ளதை நம் வேத சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளது. தாழ்ந்தவன் தாழ்ந்தவன்தான், மத சாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டவனே இந்து. பூணூல் போட்டவர்களைத் தவிர வேறு யாரும் இந்துக்கள் அல்ல… மட்டுமல்ல பூணூல் போடாதவர்களை சாதி இந்துக்கள் என குறிப்பிடலாம் என்பது என் நிலைப்பாடு, இந்த மனுநீதி தான் சரியானது” என்று இருந்தது.
இந்த பதிவை, தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 3, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஜூலை 19 முதல் 21 ம் தேதி வரை தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு (Tamil Brahmins’ Global Meet 2019) நடந்தது. அதில், சாதி உண்டு என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் என்பவர் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் கூட அளிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். கிட்டத்தட்ட அவருடைய கருத்துக்களை எச்.ராஜா ஏற்றுக்கொண்டு பதிவிட்டது போல இந்த ட்வீட் இருந்தது.
எச்.ராஜா செய்த, அவரது பெயரில் பொய்யாக உருவாக்கப்பட்ட ட்வீட், போலி ஃபேஸ்புக் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றன. அவர் பெயரில் பரவும் பல ட்வீட்கள் போலி என்று நாம் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டு வந்துள்ளோம். (கட்டுரை 1, கட்டுரை 2)அந்த வகையில், எச்.ராஜா கூறியதாக பரவும் ட்வீட் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட்டில் வெளியான தேதி இல்லை. இதனால், ஜூலை கடைசி வாரத்திலிருந்து இந்த பதிவு வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 3ம் தேதிக்கு முந்தைய நாள் அதாவது ஆகஸ்ட் 2ம் தேதி (அந்த ட்வீட்டில் பதிவு வெளியாகி ஒரு நாள் ஆகிறது என்று உள்ளது) வரை எச்.ராஜா வெளியிட்ட பதிவுகளை ஆய்வு செய்தோம். ஆனால், எச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் அந்த ட்வீட் இல்லை.
எச்.ராஜா ட்வீட் செய்தது தொடர்பாகச் செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். எச்.ராஜா அப்படி எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை. அது போலியானது” என்று குறிப்பிட்டனர்.
இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அதில், எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்று எந்த ஒரு ட்வீட்டும் இல்லை, இது வெறும் போட்டோ எடிட் செய்ய்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும், இந்த பதிவு நீக்கப்படவில்லை. இதன் மூலம், விஷமத்தனத்தோடு இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எச்.ராஜா பெயரில் பரவும் ட்வீட் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிறப்பில் ஏற்றத்தாழ்வு உண்டு!- எச்.ராஜா கூறியதாகப் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
