
உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க-வுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒரு இன்ஃபோகிராபிக்ஸ் கார்டு பகிர்ந்துள்ளனர். அதில், தி.மு.க உலக அளவில் 4வது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது என்று தலைப்பு உள்ளது.
ஃபாக்ஸ் நியூஸ் டாட் காம் 2017ம் ஆண்டு வெளியிட்ட சர்வே என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், 4வது இடம் திராவிட முன்னேற்றக் கழகம் – இந்தியா என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில் இதற்கு திராவிட *** எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதி, வீரதமிழன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 13ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க இருப்பது போன்று எந்த ஒரு செய்தியும் வந்த நினைவு இல்லை. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ், பா.ஜ.க-வைப் பற்றி இப்படி சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது நினைவிலிருந்தது.
இதனால், 2017ம் ஆண்டு உலகின் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியல் ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, காங்கிரஸ், பா.ஜ.க பற்றி பரவிய வதந்தியும் அதன் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுக் கட்டுரைகளுமே நமக்குக் கிடைத்தன.

ஃபாக்ஸ் நியூஸ் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று அதன் இணையதளத்தில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு பட்டியலையும் ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்டதாக செய்தி இல்லை.

உலகின் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலை பி.பி.சி வெளியிட்டதாக வந்த வதந்தியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரையைப் படித்துப் பார்த்தோம். அந்த பட்டியலில் உள்ள கட்சிகளின் பெயர்களும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள கட்சிகளின் பட்டியலும் 4வது இடத்தைத் தவிர அப்படியே ஒத்துப்போயின. அதில், நான்காவது இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தனர். வேறு சில பதிவுகளில், நான்காவது இடத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி பகிர்ந்திருந்தனர். அந்த ஆய்வில் உண்மையில் அந்த பட்டியலை பிபிசி வெளியிடவில்லை என்று தெரிந்தது.
பிபிசி பெயரில் போலியாக இயங்கிவரும் பிபிசி நியூஸ் பாயிண்ட் என்ற நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததும் கண்டறிந்தனர். ஆனால், எந்த ஒரு அடிப்படை ஆய்வுமின்றி அந்த கட்டுரை வெளியாகி இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். அந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது கூட பிபிசி நியூஸ் ஹப் என்ற பெயரில் அந்த பொய்யான செய்தி இணையத்தில் உள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அந்த பட்டியலை அப்படியே எடுத்து, காங்கிரஸ், பா.ஜ.க பெயருக்கு பதில் தி.மு.க பெயரை சேர்த்து புதிததாக ஒரு இன்ஃபோ கார்டு உருவாக்கி பகிர்ந்திருப்பது உறுதியானது.

உலகில் ஊழல் மலிந்த கட்சிகள் என்று ஏதாவது பட்டியல் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அவரவர் தங்களுக்குப் பிடிக்காத கட்சிகளின் பெயரை வைத்து போலியாக தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு வருவது தெரிந்தது. முன்னணி ஆய்வு நிறுவனங்கள், அமைப்புக்கள் இதுபோன்று எந்த ஒரு பட்டியலையும் வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த பதிவு பொய்யானது என்று உறுதியாகி உள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

This report is fake.