எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்ன எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Video Link

Anand Sekar என்பவர் செப்டம்பர் 23, 2019 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அதிமுக.,வின் பழைய கட்சி நிகழ்ச்சி பற்றியதாகும். இதில், ஜெயலலிதா எம்ஜிஆர் கையில் வெள்ளி செங்கோல் ஒன்றை கொடுக்க, அதனை அருகில் இருக்கும் நபரை அழைத்து ஒரு கை பிடிக்கும்படி எம்ஜிஆர் சொல்கிறார். ‘அந்த நபர்தான் எடப்பாடி பழனிசாமி’ என, வீடியோவை பகிர்ந்தவர் எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ பதிவில் கூறியுள்ளது தவறான தகவலாகும். ஏனெனில், தற்பாது தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி, அஇஅதிமுக.,வில் சேர்ந்தது 1987ம் ஆண்டிற்கு பிறகுதான். அப்போது எம்ஜிஆர் மறைந்து, அஇஅதிமுக.,வில் ஜெயலலிதா, ஜானகி என 2 அணிகள் உதயமாகியிருந்த நேரம். இதனை பல நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமியே தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர, மேலே குறிப்பிடும் சம்பவம் தமிழக அரசியலில் மிக பிரபலமானதாகும். இது, 1986ம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் நிகழ்ந்ததாகும். அதில், எம்ஜிஆருக்கு ஜெயலலிதா வெள்ளி செங்கோல் பரிசாக அளிக்க, அதனை அருகில் நின்ற சாதாரண அதிமுக தொண்டனை அழைத்து ஒரு கை பிடிக்கச் சொல்லி அழகு பார்த்தவர் எம்ஜிஆர். இதனை தற்போதைய அரசியல் நிகழ்வுடன் இணைத்து, தவறான தகவலை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்துள்ளார்.

இதே வீடியோவை ஜெயலலிதா ஆதரவாளர்கள் சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதன் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், இந்நிகழ்வு பற்றி விரிவான விளக்கம் ஒன்றை கூறியுள்ளனர். அதில், ‘’எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாடு நடத்த எம்ஜிஆர் சொன்னார். அதன்பேரில், மதுரை தமுக்கம் மைதானத்தில் கே.கண்ணன், திருச்சி சவுந்தரராஜன் ஏற்பாட்டில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. அப்போது, முசிறிப்புத்தன் தயார் செய்த வெள்ளி செங்கோலை ஜெயலலிதா மேடையில் சென்று எம்ஜிஆரிடம் வழங்கினார்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘’ மதுரையில் 1986-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற இருந்த ரசிகர் மன்ற மாநாட்டுக்கு முத்தைய தினம் இரவு… இசையமைப்பாளர்கள் சங்கர்-கனேஷ் இசையமைப்பில் நடந்திய இன்னிசை கச்சேரியில் டி.எம்.எஸ்-பி.சுசிலா ஆகியோர் ரசிகர்களுக்கு இரவு இசை விருந்து படைத்தனர். மறுநாள் காலை ஊர்வலம் #தமுக்கம் திடலில் இருந்து யானை மீது அமர்ந்து கழகக்கொடியை ஏந்தியவாறு அண்ணன் நெல்லை #இளமதி தலைமையில் துவங்கிய ஊர்வலம், மதுரை பந்தய சாலை திடலில் முடிந்து, மாநாடு கடலூர் அண்ணன் #முருகுமணி தலைமையில் துவங்கியது. ஊர்வலத்தை தொடங்கிவைத்தவர் #ஜெயலலிதா அவர்கள். அன்று மாலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் மீண்டும் டி.எம்.ஸ்-பி.சுசிலா இணைகள் ஒரு மாபெரும் இன்னிசை மழை பொழிய, இவர்களுடன் இணைந்து இயற்கையும் #சோ…வென இசை மழையை.. பொழிய.. இவ்விழாவில்தான் #புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஆறடி உயரமுள்ள செங்கோலை பரிசாக வழங்கினார் #ஜெயலலிதா. ,’’ எனவும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, ட்விட்டரில் மேற்கண்ட வீடியோ பதிவை ஒருவர் பகிர, அதற்கு மறுப்பு தெரிவித்து தீவிர எம்ஜிஆர், ஜெயலலிதா ஆதரவாளர்கள் சிலர் விளக்கம் அளித்திருந்தைக் காண முடிந்தது.

குறிப்பாக, யாதவ மகா சபை தலைவரான தேவநாதன் இதுபற்றி மறுப்பு கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ‘’அவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, தென் ஆற்காடு மாவட்ட மாணவர் பிரிவு முன்னாள் செயலாளர் எம்.ஆர்.முருகமணி,’’ எனக் கூறியிருந்தார். 

இதன் அடிப்படையில் பார்த்தால், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவில் கூறப்படுவது போல, எம்ஜிஆருடன் வெள்ளி செங்கோலை பிடிப்பவர் எடப்பாடி பழனிசாமி இல்லை என உறுதி செய்யப்படுகிறது. அந்த நிகழ்வின் புகைப்படம் மீண்டும் ஒரு ஆதாரத்திற்காக கீழே தரப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False