
‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைப்பு எனக் கூறியுள்ளனர். பின்னர், கீழே தனியாக, ‘’காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் பதிவான வாக்கு இயந்திரத்தில் சீல் அகற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பேட்டரியை கலட்டவே சீலை பிரித்ததாகவும் பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது என்று தேர்தல் அதிகாரி விளக்கம் கூறி இருக்கிறார். எப்புடி ஆஃபிசர்? ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தேன்கூட்டை கலைப்பதற்காக ஆட்டோவிற்கு தீ வைத்தது போலவா?,’’ என்றும் எழுதியுள்ளனர்.
இதன்படி, முதலில், வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று இவர்களே ஒத்துக் கொள்கின்றனர். பின்னர், இதுபற்றி தேர்தல் அதிகாரி விளக்கம் கூறி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதவிர, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை இங்கே மேற்கோள் காட்டி கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பதிவின் அடிப்படையில் பார்த்தால், உண்மை, வதந்தி என இரண்டும் மாறி மாறி கலந்துள்ளதாகப் புரிகிறது. இருந்தாலும், நாம் ஒருமுறை உண்மை செய்தி என்னவென்று தேடிப் பார்த்தோம்.

இதில் தினகரன் வெளியிட்ட செய்தி ஆதாரம் கிடைத்தது. அந்த செய்தியை பார்வையிட்டபோது, இந்த மீமில் கூறப்பட்டது போல, உத்திரமேரூரில் வாக்கு இயந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டதாக புகார் எழவே, அதுபற்றி தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தினகரன் வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.
எனவே, இந்த பதிவில் கூறியுள்ளதன்படி பார்த்தால், பாதி உண்மையான தகவல், பாதி சொந்த கருத்து இடம்பெற்றுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி சொந்த கருத்து கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை நமது வாசகர்கள் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?
Fact Check By: Parthiban SResult: Mixture
