
‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ…
தகவலின் விவரம்:

இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை நசுக்குவதுதான் இஸ்ரேலின் திட்டம் என்று எழுதியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல்தான் நிதி உதவி செய்கிறது, ஆயுத உதவி செய்கிறது என்றெல்லாம் பரவலாக, கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதனை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஐஎஸ் தீவிரவாதிகளோ அல்லது இஸ்ரேல் அரசு குறிப்பிட்டதில்லை. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, பலரும் ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதுபற்றி நாம் கூகுளில் தேடியபோது, இஸ்ரேல்தான் ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது போலவும், மறுபுறம் ஈரான் ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது போலவும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, ஈரானும், இஸ்ரேலும் தங்களது பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, போட்டி போட்டுக் கொண்டு, ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை வளர்த்துவிடுவதாகவும், சில தகவல்களில் கூறப்பட்டிருந்தது.

இதுபற்றி விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் உலகம் முழுக்க தாக்குதல் நடத்தினாலும், ஏன் இஸ்ரேல் நாட்டை தொடுவதில்லை, அதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக, ஒரு ஆய்வுக் கட்டுரையின் விவரமும் நமக்குக் கிடைத்தது. அதில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், தீவிரவாதம் எத்தகைய வடிவில் வந்தாலும் அதற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக, நிறைய பணம் செலவழித்து, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன, அத்துடன் தீவிரவாத இயக்கத்தினருக்கு எந்த காலத்திலும் உதவக்கூடாது என்ற கொள்கையை இந்நாடுகள் பின்பற்றுவதாகவும் நமக்கு தகவல் கிடைத்தது.
அதாவது, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தீவிரவாதத்தை மிகக் கடுமையாக எதிர்ப்பவை என்பதோடு, தீவிரவாத இயக்கங்களுக்கு நேரடியாகவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும் உள்ளன. எனவேதான், எதிர் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்ற அச்சத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மீது ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் அந்த தரவுகளில் கூறப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். எனவே, ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த விரும்பினாலும், எதிர் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்ற அச்சத்தால், அவர்கள் இதுவரை அந்நாடு மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என தெரியவருகிறது. இதனை ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட நபரே விரிவாக எழுதியுள்ளார். இதன்படி, இஸ்ரேல்தான், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவி செய்கிறது என்பதில் நம்பகத்தன்மை இல்லை.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன?
Fact Check By: Parthiban SResult: Mixture
