உத்தரப்பிரதேசத்தில், வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று ரூ.500 கொடுத்து கையில் மையும் வைத்துச் சென்ற பா.ஜ.க-வினர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

BJP ஆட்கள் வந்தார்கள் விரலில் மை வைத்தார்கள் ரூ 500 தந்தார்கள் வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று சொன்னார்கள் .

ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . இலக்ஷன் கமிசன் நடவடிக்கை எடுக்குமா?

UP BJP 2.png

https://www.facebook.com/groups/dmkfans/permalink/2808019169270389/

Archived link

தங்கள் கிராமத்துக்கு பா.ஜ.க-வினர் வந்ததாகவும், நாளை நடைபெற உள்ள வாக்குப் பதிவின்போது யாரும் வாக்களிக்க வர வேண்டாம் என்று கூறி கிராம மக்கள் அனைவரின் கையிலும் மை வைத்துள்ளனர். மேலும், ஒவ்வொருவருக்கும் ரூ.500 அளித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் திரண்டுவந்து புகார் செய்துள்ளனர்.

facebook DMK என்ற பக்கத்தில், Rishi Rishi என்பவர் 2019 மே 25 அன்று இதை வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, பல இடங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த சூழலில் இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் சமூக ஊடகங்களில் பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வாக்களிக்கவிடாமல் பா.ஜ.க-வினர் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மைதானா என்று கண்டறிய கூகுளில் இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, எக்கனாமிக் டைம்ஸ், இந்தியாடுடே, புதிய தலைமுறை என பல ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது தெரிந்தது.

UP BJP 3.png

புதிய தலைமுறையில் 2019 மே 19ம் தேதி வெளியான செய்தியைப் பார்த்தோம். உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தாரா ஜீவன்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், "பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேர் தங்கள் விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக" தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த செய்தியை முதலில் ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது தெரிந்தது. அந்த செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் மே 18ம் தேதி மாலை இந்த செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது.

Archived link

இது குறித்து சந்தோலி சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் கே.ஆர்.ஹரிஷ்ஷிடம் கேட்டபோது, "போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயப்படுத்தி அவர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளனர். இதனால், இவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இன்னும் உள்ளது" என்றார். இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஜி நியூஸ் வெளியிட்ட செய்தியில், இந்த கிராம மக்கள் அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. சந்தோலி நாடாளுமன்றத் தொகுதி முழுக்க தலித் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகி புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், இந்த தகவல் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் முன்னணி செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் சந்தோலி சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் கூறிய செய்தி நமக்கு கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என்று உறுதியாகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க, பா.ஜ.க-வினர் கிராம மக்கள் கையில் வலுக்கட்டாயமாக மை பூசி, ரூ.500 கொடுத்ததாக வெளியான பதிவு உண்மைதான் என்று நிரூபிக்கப்படுகிறது.

Avatar

Title:வாக்களிக்க வேண்டாம் என்று ரூ.500 தந்து, கையில் மை வைத்த பா.ஜ.க.,வினர்! - உத்தரப்பிரதேச நிகழ்வு நிஜமா?

Fact Check By: Praveen Kumar

Result: True