“இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம்

இளம் பெண் ஒருவரின் 10, 12ம் வகுப்பு, கல்லூரி சான்றிதழ்கள் ஒருவரிடம் இருப்பதாக தொலைபேசி எண்ணுடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

PRIYA 2.png

Facebook Link I Archived Link

இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிகம் பகிரவும்: பெயர்: R.Priya, தவறவிட்ட 10th,12th மற்றும் கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது. சான்று Reg no: 14227202. தொடர்புக்கு: c.sakthivel, Railway colony, Madurai. 8940953055 என்ற எண்ணுக்கு அழைக்கவும். உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Dhana lakshmi 😉 என்பவர் 2016 அக்டோபர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார், 2019 ஆகஸ்ட் இப்போது வரை இந்த பதிவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

இளம் பெண் ஒருவரின் சான்றிதழ் காணாமல் போய்விட்டதாக 2016ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் அவருக்குக் கிடைத்துவிட்டதா, இன்னும் ஏன் அந்த பதிவு அப்டேட் செய்யப்படாமல் பகிரப்பட்டு வருகிறது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோம். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. ஆனால், ட்ரூகாலரில் சக்திவேல் என்று காட்டியது.

இந்த ஃபேஸ்புக் பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த பலரும் இது தவறான பதிவு என்று குறிப்பிட்டிருந்தனர். சிலர், போலீசில் அளித்திருக்கலாமே, நான்கு ஆண்டுகளாக கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டிருந்தனர். சிலரோ, பள்ளி, கல்லூரி சான்றிதழில் எந்த பள்ளி, எந்த கல்லூரி என்று குறிப்பிட்டிருப்பார்கள்… அந்த கல்லூரியை அல்லது பள்ளியை அணுகியிருந்தால் முகவரி கிடைத்திருக்குமே என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

PRIYA 3.png

இந்த பதிவை வெளியிட்டவர் பின்னணியை ஆய்வு செய்தோம். அவரைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், பெண்களின் படத்தைப் பகிர்ந்து, இதை வேறு குழுவில் ஷேர் செய்தால் நம்பர் தருவேன் என்ற வகையில், பாலியல் சார்ந்த பதிவுகளை அதிகம் பகிர்ந்திருந்தார். இவை அனைத்தும் இந்த பதிவு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

PRIYA 4.png

போலீசில் இந்த சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டதாக எதுவும் தகவல் இல்லை. இதனால், மதுரையில் எந்த காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்பது என்று தெரியவில்லை. மதுரை கமிஷனர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “யார் புகார் அளித்தது, எப்போது புகார் அளித்தார்கள் என்று எந்த விவரமும் தெரியாமல் 2016ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் விஷயத்தை தேடுவது கடினம். எந்த காவல் நிலையத்தில், எந்த தேதியில் புகார் அளித்தார்கள் என்று சொன்னால் தேடி கண்டுபிடித்து சொல்ல முடியும்” என்றனர்.

இந்த பெண் யார் என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆபாச இணையதளங்களிலும், திருமண தேடல் இணையதளங்களிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும், 2014ம் ஆண்டு மிக நீளமான முடிகொண்ட பெண்கள் என்ற பிளாக் பதிவில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. 2013ம் ஆண்டு வேறு ஒரு பாலியல் தளத்தில் இந்த புகைப்படம் பதிவிட்டதும் தெரியவந்தது.

PRIYA 5.png

தொடர்ந்து பல ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருவதும் தெரிந்தது. அதனால் இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இவருடைய புகைப்படம் எப்படி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதை கண்டறிய முடியவில்லை.

சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பகிரப்பட்டு வந்த படத்தை எடுத்து, விஷமத்தனமாக இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

ஃபேஸ்புக் பதிவில் உள்ள தொலைபேசி எண் பயன்பாட்டில் இல்லை.

இந்த தகவல் தவறானது என்று பலரும் கமெண்ட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பதிவிட்டவரின் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது.

படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படம் 2013ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

ரிவர்ஸ் இமேஜ் தேடலின் போது, இந்த புகைப்படம் பல திருமண வரன் தேடும் இணையதளம், பாலியல் இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சான்றிதழ்கள் தன்னிடம் இருப்பதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on ““இளம்பெண் தவறவிட்ட சான்றிதழ்கள்”- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

  1. இந்த பதிவைப்பற்றி எச்சரிக்கை கொடுத்ததற்கு நன்றி. இப்படிப்பட்ட பதிவுகளை நான் பகிர்வதில்லை.நீங்களே இந்த பதிவு தவறெனில் பதிவிட்டவரிடம் சொல்லி அழித்துவிடச் சொல்லலாம்.அது அனைவருக்கும் நல்லது.

Comments are closed.