
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எச்.ராஜா விலகாத வரை தமிழ்நாட்டில் தாமரை மலர்வது கடினம் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவல் விவரம்:

புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் நடிகர் வடிவேலுவின் திரைப்பட காட்சியைச் சேர்த்துப் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பாஜகவிலிருந்து எச்.ராஜா விலகாதவரை; தமிழ்நாட்டில் தாமரை மலர்வது என்பது மிகக்கடினம். – எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்” என்று உள்ளது.
இந்த பதிவை அண்ணனின் அட்மின் குழு என்ற பக்கம் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தாலும் எச்.ராஜா பா.ஜ.க தேசிய செயலாளர் பதவியில் உள்ளார். அவரைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாக முருகன் விமர்சனம் செய்ய வாய்ப்பில்லை. மேலும், இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட், பின்னணி வாட்டர் மார்க் லோகோ எதுவும் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடுவது போன்று இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவுகளை ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நியூஸ் கார்டில் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது போல குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த தினத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.
அப்போது, “பாஜகவினர் சட்டசபையில் அமர்வது நிச்சயம். நமது எம்.எல்.ஏ.க்கள் கோட்டையை அலங்கரிப்பார்கள்; அதுவரை எனக்கு ஓய்வில்லை. – எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பதாக, தெரியவந்தது.

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர், ‘’இந்த நியூஸ் கார்டு எங்களுடையது இல்லை. போலியானது” என்று உறுதி செய்தார்.
அவர், எச்.ராஜா பற்றிக் குறிப்பிட்ட அந்த தினத்தில் ஏதாவது கூறினாரா என்று பார்த்தோம். அப்போது, கடந்த 29ம் தேதி சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தது தொடர்பான செய்தியை எல்லா ஊடகமும் வெளியிட்டிருந்தன. அதில், சட்டப் பேரவையை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அலங்கரிப்பார்கள், மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது நல்லது என்ற வகையில் அவர் பேசியிருப்பது தெரிந்தது.
எச்.ராஜா பற்றி அவர் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியிருந்தால் எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

இதன் அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் பரப்பியிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:‘எச்.ராஜா இருக்கும்வரை தாமரை மலராது’ என்று எல்.முருகன் கூறியதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
