
அரசியலிலிருந்து விலகுகிறேன், மதிமுக-வை கலைக்கிறேன் என்று வைகோ அறிவித்ததாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியலில் இருந்து விலகுகிறேன். மதிமுக கலைக்கப்பட்டு விரைவில் திமுகவுடன் இணைக்கப்படும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் அறிவிப்பு” என்று இருந்தது.
இந்த பதிவை Mannai Rafik என்பவர் 2021 நவம்பர் 15ம் தேதி வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரசியலில் இருந்து விலகுகிறேன், ம.தி.மு.க-வை கலைக்கிறேன் என்று வைகோ கூறியிருந்தால் அதை மிகப்பெரிய செய்தியாக ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டிருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆனால், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்ததாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போலவே உள்ளதால் இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இதன் பின்னணி டிசைன், வாட்டர் மார்க் லோகோ இல்லாதது இது போலியானது என்பதை உறுதி செய்தது. இது போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 14ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் இது பற்றி பேட்டி அளித்திருந்தது தெரியவந்தது. புதிய தலைமுறையில் இது தொடர்பான செய்தி, வீடியோ பதிவு வெளியாகி இருந்தது. அதில், “ம.தி.மு.க.வை கலைத்து விட்டுத் தான் அரசியலை விட்டு விலக உள்ளதாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் LOGOவை பயன்படுத்தி சிலர் தவறான கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால், அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேல்மருவத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
மேலும், வைகோ அளித்த பேட்டி அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுடன் மதிமுக தலைமைக் கழகச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ ஃபேஸ்புக்கில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில் “புதிய தலைமுறை அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை. போலியாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அந்த செய்திக்கும், புதிய தலைமுறை நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த செய்தியும் பொய்யானது” என்று கூறியிருந்தார்.
அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று வைகோ கூறியதாக விஷமிகள் போலியாக நியூஸ் கார்டை பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலில் இருந்து விலக உள்ளேன் என்று வைகோ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று வைகோ அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
