
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஐ.நா-வால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும், என உலக அமைதிக்கான அமைப்பு (World Peace Organization) நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவரின் படத்துடன் பிபிசி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஐநாவால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும் என World Peace Organization நடத்திய கருத்துக் கணிப்பில் பகீர் தகவல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை முத்து கிருஷ்ணன் என்பவர் பிப்ரவரி 22, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புக்கள் நாடு, மாநிலங்கள் அளவில் கருத்துக் கணிப்புகள், புள்ளிவிவரங்களை வெளியிடும்… குறிப்பிட்ட அரசியல் கட்சியை வைத்து கருத்துக் கணிப்பு நடத்தியதாக இதில் குறிப்பிட்டிருப்பது இதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நியூஸ் கார்டில் 2020 பிப்ரவரி 22 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட பிப்ரவரி 22ம் தேதி இது தொடர்பாக பிபிசி நியூஸ் கார்டு, செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். பிபிசி நியூஸ் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, மேற்கொண்ட நியூஸ் கார்டு வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும், பிபிசி தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பது தெரிந்தது. பிபிசி நியூஸ் என்பது ஆங்கிலத்திலும் தமிழ் என்பது தமிழிலும் இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் எல்லாமே ஆங்கிலத்திலேயே இருந்தது.

BBC Tamil 1 | Archived Link 1 |
BBC Tamil 2 | Archived Link 2 |
பிபிசி இணையதளத்தில் 22ம் தேதி உலக அமைதி அமைப்பு தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். இந்திய அளவிலும் சரி, உலக செய்திகளிலும் சரி அப்படி ஒரு செய்தியே இல்லை.
உண்மையில் World Peace Organization தி.மு.க தொடர்பாக கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளதா என்று கண்டறிய அதன் இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம். சமீப நாட்களில் இந்தியா, தமிழ்நாடு தொடர்பாக அது எந்த ஒரு செய்தியையோ கருத்துக்கணிப்பையோ வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
theowp.org | Archived Link 1 |
reliefweb.int | Archived Link 2 |
இந்த படத்தில் உள்ளவர் தமிழ் செய்தி வாசிப்பாளரா என்று அறிய இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படத்தில் இருப்பவர் Aliya Nazki என்றும் இவர் பிபிசி உருது செய்தி வாசிப்பாளர் என்றும் தெரியவந்தது. பிபிசி நிறுவனத்தின் ஏதோ ஒரு நியூஸ் கார்டை எடுத்து அதில் தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டிருப்பது உறுதியானது.

BBC | Archived Link 1 | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு கருத்துக் கணிப்பையும் World Peace Organization வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நியூஸ் கார்டு பிபிசி தமிழ் வெளியிட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் உள்ளவர் பிபிசி தமிழ் செய்தி வாசிப்பாளர் இல்லை, உருது செய்தி வாசிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், “தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான் போலவே தமிழ்நாடும் மாறும் என World Peace Organization” அறிவித்துள்ளது என்று வெளியிடப்பட்ட இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
