
‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனார்,’’ என்று பகிரப்பட்டிருந்த ஒரு கீழ்த்தரமான வதந்தியை காண நேரிட்டது. இப்படி எந்த செய்தியும் வெளியாகாத நிலையில் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
வதந்தியின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நக்கீரன் கோபால் பெயரில் ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளம் பகிர்ந்த செய்தி எனக் கூறி, ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதன் மேலே, முதலாமாண்டு நினைவு தினம் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்கிரின்ஷாட்டில், ‘’நக்கீரன் பத்திரிக்கை உரிமையாளர் கோபால் அவர்களின் மனைவி கார் டிரைவர் உடன் ஓட்டம்,’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவை பார்த்தாலே, இது தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் பகிரப்பட்ட ஒன்றாக தெரிகிறது. இதுதொடர்பாக, ஏசியா நெட் தமிழ் இணையதளம் செய்தி எதுவும் வெளியிட்டதாகக் கூறி எதுவும் செய்தி வெளியாகியுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது இப்படி எந்த செய்தியின் லிங்கும் கிடைக்கவில்லை. ஒருவேளை 2018ம் ஆண்டில் ஏசியாநெட் செய்தி வெளியிட்டுவிட்டு பின்னர் அதை டெலிட் செய்திருக்கலாம் அல்லது அவர்களின் பெயரை பயன்படுத்தி யாரோ போலி செய்தி வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து, இந்த விவகாரம் பற்றி நக்கீரன் கோபால் தரப்பின் விளக்கத்தைப் பெற முயற்சித்தோம். இதுதொடர்பாக, நக்கீரன் இதழில் பணிபுரியும் ரிப்போர்ட்டர் ஒருவரிடம் விசாரித்தோம்.
இதற்கு அவர், ‘’இது அப்பட்டமான பொய் செய்தி. ஓராண்டுக்கு முன் இப்படி தவறான செய்தியை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அவர்கள் பற்றி ஏற்கனவே நக்கீரன் சார்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பதிவை மறுபகிர்வு செய்துள்ள கிஷோர் சாமி தனிப்பட்ட விரோதம் காரணமாக இதனைச் செய்துள்ளார். ‘வீண் விளம்பரம் தேடுவதற்காக, இப்படி கீழ்த்தரமான தகவல் பரப்பும் நபரை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்,’ என ஏற்கனவே கோபால் தெரிவித்துவிட்டார். ‘பொடாவை எதிர்த்துப் போராடிய எனக்கு வீண் மன உளைச்சல் தருவதுபோல சிலர் செயல்படுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கருதி நேர விரயம் செய்ய விரும்பவில்லை,’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்,’’ என்று நம்மிடம் தெரிவித்தார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், விளம்பரம் தேடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் தனிப்பட்ட விரோதத்திற்காக, தவறான தகவலை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
