திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!
திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடித்த மது பாட்டல் மற்றும் டம்ளர் குப்பை என்று ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சாலை முழுக்க பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித குப்பையாக உள்ளது. இரண்டு பாஜக என்ற கொடி உள்ளது. படத்தின் மீது ஸ்வட்ச் பாரத் என்று ஹேஷ் டேக் எழுதப்பட்டுள்ளது.
நிலைத்தகவலில், "நேற்று திருப்பூரில் இந்துமுன்னனி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அரியவகை காட்சிகளை பாருங்கள் முழுக்க சாராயம் குடித்த டம்ளர்கள் தண்ணீர் பாட்டில்களாகக் காட்சிகள் ஆமாம் இதுதான்# குடி உரிமைப்போராட்டம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Muthukumar Shanmugam என்பவர் டிசம்பர் 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பூரில் கடந்த டிசம்பர் 29ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் சாலை முழுக்க நிறைந்திருக்கும் மது பாட்டல் மற்றும் குப்பை என்று படத்தை பகிர்ந்துள்ளனர். அது உண்மையா என்ற ஆய்வு செய்தோம். முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
Search Link |
இந்த படம் சில ஆண்டுகளாக சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. Dhruv Rathee என்பவர் இந்த படத்தை 2018 மே மாதம் 31ம் தேதி பதிவிட்டிருந்தார். அது வெரிஃபைடு பக்கமாகவும் இருந்தது. அதில் அவர், "பால்கார் சாலை, பாரதிய ஜனதா பேரணிக்குப் பிறகு" என்று குறிப்பிட்டிருந்தார்.
Archived Link |
வேறு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று தேடியபோது, சென்னை மீம்ஸ் என்ற இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா நடத்திய பேரணியில் சட்ட மீறல் இறந்தது என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்வட்ச் பாரத் என்று பேசும் பாரதிய ஜனதா நடத்திய கூட்டத்தில் குப்பைகள் அதிக அளவில் இருந்ததாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்" என்று இருந்தது. அதில் கூட துருவ் ராத்தியின் ட்விட்டையே ஆதாரமாக வைத்திருந்தனர். எனவே, இந்த படம் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் தொகுதியில் 2018ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பது தெரிந்தது.
chennaimemes.in | Archived Link |
இதன் அடிப்படையில், திருப்பூரில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சாலை முழுக்க மது அருந்திவிட்டு போடப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், பாக்கெட் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!
Fact Check By: Chendur PandianResult: False