
“எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன்” என்று எஸ்.வி.சேகர் கூறியது போன்று நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

எடப்பாடி பழனிசாமி, எஸ்.வி.சேகர் புகைப்படத்துடன் கூடியு நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “முதல்வருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன்” என்று கூறியதாக உள்ளது.
நிலைத் தகவலில், “அடச்சீ இதெல்லாம் ஒரு பொழப்பு..! ஒரு முதல்வரை சேகர் வீட்டு பால்காரர் லெவலுக்கு கொண்டு போய்ட்டானுக..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kovai Yousuf என்பவர் 2020 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதை வைத்து அ.தி.மு.க மற்றும் எஸ்.வி.சேகர் மாறி மாறி கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று எடப்பாடி கிண்டல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்தது போன்று இந்த பதிவு உள்ளது. பார்க்க நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு பற்றி நாம் ஆய்வு மேற்கொண்டோம். இது நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் வழக்கமான தமிழ் ஃபாண்ட் போல இல்லை, மேலும் வழக்கமான பின்னணியில் தெரியும் வாட்டர் மார்க் லோகோவும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலமைச்சருக்கு எஸ்.வி.சேகர் பதில் அளித்தாரா என்று பார்த்தபோது செய்தி ஒன்று கிடைத்தது. ஆனால், அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற தகவல் இல்லை. மேலும், நியூஸ் 7 தமிழில் 2020 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. எஸ்.வி.சேகரைத் தொடர்புகொண்டு கேட்பதற்கு முன்பு நியூஸ் 7 தமிழில் விசாரிக்க முடிவு செய்து தொடர்புகொண்டோம்.
நம்மிடம் பேசிய நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவு நிர்வாகி, “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியான நியூஸ் கார்டு. இது தொடர்பாக எஸ்.வி.சேகர் கூட போலீசில் புகார் செய்துள்ளதாக தகவல் வந்தது. எங்களை டேக் செய்து ட்வீட் ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அவருடைய ட்விட்டர் பக்கத்தை பாருங்கள்” என்றார்.
எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர் பதிவிட்டிருப்பது தெரிந்தது. மேலும் தன்னுடைய ட்வீட் பதிவையே புகாராக வைத்து தமிழக முதல்வர், சென்னை போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நியூஸ் 7 தமிழ் மற்றும் எஸ்.வி.சேகர் என இரு தரப்பினரும் இந்த தகவலை மறுத்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பால் பாக்கெட் போட்ட இடத்தில் இருப்பேன் என்று எஸ்.வி.சேகர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
