
இந்திய ரூபாய் வங்க தேச நாணய மதிப்பை விடக் குறைந்துவிட்டதாகவும், ஒரு இந்திய ரூபாய் 1.18 வங்கதேச டாக்கா நாணயத்திற்கு சமம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பி.பி.சி வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். தலைப்பு முழுமையாக இல்லை. அதில், “இந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து…” என்று உள்ளது. அதன் கீழ், “கடந்த 10 ஆண்டுகளில் டாலரோடு இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய” என்று செய்தி தொடங்குகிறது… அதிலும் முழுமை இல்லை.
பி.பி.சி செய்திக்கு மேல், “புதிய இந்தியா ஒரு இந்திய ரூபாய் 1.18 டாக்கா நாணயத்திற்கு சமம்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. செய்திக்கு கீழ் படிக்காதவன் படத்தில் வரும் நடிகர் விவேக் படத்தை வைத்துள்ளனர். அதற்கு கீழ், “பாஸ் நம்மைவிட ஏழை நாடான பங்களாதேஷ்க்கு நிகரா நம்ம ரூபாய் நோட் மதிப்பு வீழ்ச்சியாகிடுச்சி… இது நமக்கு புதுசு… இதுதான் புதிய இந்தியாவா பாஸ்? நான் வேணா மத மாற்றம் நடக்குது மாட்டுக்கறி சாப்பிடுறாங்கனு சொல்லி ரெண்டு நாள் மக்களை டைவர்ட் பண்ணவா பாஸ்? என்று எழுதியுள்ளனர்.
நிலைத் தகவலில், ““அதிகாரம் பரவாயில்லை; முட்டாள்தனம் பொதுவாக பாதிப்பில்லாதது; அதிகாரமும் முட்டாள்தனமும் ஒன்றாக இணைந்தால் மிக ஆபத்தானது. பங்களா தேஷ் ஐ விட பின்னடைவில் இந்தியப்பொருளாதாரம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, விவாதிப்போம் வாங்க என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Faizal Faizal என்பவர் 2019 ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்க தேசத்தின் டாக்கா பணத்தைவிட இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இறங்கிவிட்டது என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தது. பி.பி.சி பெயரில் செய்தி வெளியாகி இருப்பதால் அது உண்மையாக இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உண்மையில் ஒரு டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு என்ன, வங்க தேச டாக்காவின் மதிப்பு என்ன என்று ஆய்வு மேற்கொண்டோம்.
ஆகஸ்ட் 30 பிற்பகல் நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 71.55 ரூபாய் என்ற அளவில் இருந்தது.

ஒரு டாலருக்கு எதிராக வங்க தேசத்தின் டாக்கா மதிப்பு எவ்வளவு என்று ஆய்வு செய்தோம். அது 84.58 என்ற அளவில் இருந்தது.

ஒரு ரூபாய்க்கு எதிராக வங்க தேசத்தின் மதிப்பு எவ்வளவு என்று தேடினோம். அது 1.18 வங்கதேச டாக்காவாக இருந்தது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பை விட வங்கதேச டாக்காவின் மதிப்பு சற்று குறைவாகவே இருந்தது. அதாவது, 1.18 டாக்கா கொடுத்தால் மட்டுமே ஒரு இந்திய ரூபாயை வாங்க முடியும். இந்திய ரூபாயின் மதிப்புக்கு இணையாகவோ, அதற்கு மேலாகவோ இல்லை என்பது உறுதியானது.

பி.பி.சி பெயரில் செய்தி வெளியாகி உள்ளதே… அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது பி.பி.சி வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. இந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து விட்டதா? என்று பி.பி.சி உண்மை சரிபார்ப்பு கட்டுரை ஒன்றை 2019 ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியா ரூபாயின் மதிப்பை விட டாக்கா மதிப்பு உயர்ந்துவிட்டது என்று பகிரப்பட்டு வரும் வதந்தி உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டிருந்தனர். தலைப்பை தங்களுக்கு சாதகமான வகையில் சுருக்கி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருப்பது உறுதியானது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,
2019 ஆகஸ்ட் 30 பிற்பகல் நிலவரப்படி ஒரு டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 71.50 ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்க தேசத்தின் டாக்காவின் மதிப்பு 84.61 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய்க்கு எதிரான டாக்காவின் மதிப்பு 1.18 டாக்காவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.பி.சி வெளியிட்ட செய்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு வங்கதேசத்தின் டாக்காவுக்கு கீழ் சென்றுவிட்டது என்று குறிப்பிடவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வங்கதேசத்தின் டாக்கா பணத்தின் மதிப்புக்குக் கீழ் இந்திய ரூபாயின் மதிப்பு சென்றுவிட்டது என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
