நித்தியானந்தா பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றாரா எச்.ராஜா?
நித்தியானந்தா பிறந்த நாளை உலக பெண்கள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று எச்.ராஜா கூறியதாக போலியான ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வதந்தியின் விவரம்:
நித்தியானந்தாவுடன் எச்.ராஜா அமர்ந்திருக்கும் படத்துடன் ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. H Raja என்று பெயர் இருந்தாலும் வடிவேலு முகத்துடன் மார்ஃபிங் செய்யப்பட்ட எச்.ராஜா படம் அதில் டி.பி-யாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், "நண்பர் நித்தியானந்தா பிறந்த நாளை... உலக பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், "நாட்டுல எல்லையில் பிரச்சனை, கொரோனா பிரச்சனை....இந்த சங்கி பிரச்சனையை பாருங்கள் மக்களே..." என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை facebook DMK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Thangaraj Kasilingam என்பவர் 2020 ஜூன் 16 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எச்.ராஜா பெயரில் ட்வீட் வெளியாகி இருந்தாலும் டி.பி படத்தில் வடிவேலு முகத்துடன் எச்.ராஜா முகம் மார்ஃபிங் செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது இது எச்.ராஜா பெயரில் இயங்கும் போலியான பக்கம் என்பது தெரிகிறது. எச்.ராஜாவை ட்ரோல் செய்ய யாரோ அவருடைய பெயரில் போலியாக ட்விட் அக்கவுண்ட் திறந்து பதிவிட்டு வருவதும், அதை எச்.ராஜாவே வெளியிட்டது போலவே இவர்கள் பகிர்ந்திருப்பதும் தெரிகிறது.
பகிரப்பட்டு வரும் போலி எச்.ராஜா ட்விட் அக்கவுண்ட்டை பார்த்தோம். அதன் ஐடி லிங்க் @HRajaOffl (எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தின் ஐடி @HRajaBJP என்பதாகும்). முழுக்க முழுக்க எச்.ராஜா, பா.ஜ.க-வை ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
அதில் நித்தியானந்தா தொடர்பான மேற்கண்ட பதிவும் இருந்தது. எந்த இடத்திலும் இது எச்.ராஜாவைக் கிண்டல் செய்யும் வகையில், எச்.ராஜாவை விமர்சிக்கும் ட்விட்டர் பக்கம் என்று குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வ பக்கம் போலவே நடத்தி வருகின்றனர். இந்த பதிவும் ட்ரோல் என்றே கண்கூடாகத் தெரிகிறது.
ஆனால், இந்த பதிவை உண்மையானது போல சிலர் பகிர்ந்து வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது. நிலைத் தகவலில் "நாட்டில் எல்லையில் பிரச்னை, கொரோனா பிரச்னை... இவர்களின் பிரச்னையைப் பாருங்கள் மக்களே" என்று குறிப்பிட்டதன் மூலம், எச்.ராஜாவே கூறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த பலரும் எச்.ராஜாதான் இந்த ட்வீட்டை வெளியிட்டார் என்பது போலவே கமெண்ட் செய்து வருகின்றனர்.
எச்.ராஜா ட்ரோல் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தாலும் தகவல் தவறானதுதான். எச்.ராஜாவை விமர்சிப்பவர்கள் தங்கள் பெயரில் பதிவிட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். எச்.ராஜா கூறிய கருத்தை விமர்சிப்பது வேறு, அவர் சொல்லாததை அவர் பெயரில் வெளியிடுவது என்பது வேறு… இ
ப்படி ட்ரோல் பக்கங்களில் வெளியிடும் பதிவுகளை பலரும் பார்த்து சிரித்துவிட்டு கடந்து சென்றார்கள் என்றாலும், சிலர் உண்மை என்று நினைத்து பகிரவும் வாய்ப்புள்ளது.
நம்முடைய ஆய்வில், இந்த பதிவை எச்.ராஜா வெளியிடவில்லை; எச்.ராஜாவை ட்ரோல் செய்ய வெளியிட்ட பதிவை உண்மை என நினைத்துப் பகிர்ந்து வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நித்தியானந்தா பிறந்த நாளை உலக பெண்கள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:நித்தியானந்தா பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றாரா எச்.ராஜா?
Fact Check By: Chendur PandianResult: False