Fact Check: ஸ்டாலினை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறி மு.க.அழகிரி பெயரில் பரவும் போலி ட்வீட்
கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் கலைஞர் தி.மு.க-வை ஒப்படைத்துவிட்டு உள்ளார் என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மு.க.அழகிரி வெளியிட்ட ட்வீட் போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் தலைவர் கலைஞர் திமுக வை ஒப்படைத்து உள்ளார். வைரஸ் பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் ஒன்றுகூடுவோம் வா என அழைத்ததால் காவு கொடுக்கின்றனர். ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி உருப்பட போவதில்லை" என்று உள்ளது. இந்த பதிவை முத்து கிருஷ்ணன் என்பவர் 2020 ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க-வின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவது பலருக்கும் மிகப்பெரிய உருத்தலாக உள்ளது. எனவே, ஒன்றிணைவோம் வா என்பதை ஒரு ஆபாசமானதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவியதால்தான் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்ததாக கூறிவந்தனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கும் கொரோனா தொற்று ஏற்படவே வேறுவிதமான பிரசாரங்களில் இறங்கிவருகின்றனர்.
அந்த வகையில் மு.க.அழகிரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்டது போன்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர். எனக்கு சமூக ஊடகங்களில் கணக்கு இல்லை என்று அழகிரி கடந்த மாதம் அறிவித்திருந்தார் என்பதால் நமக்கு இந்த பதிவு போலியானது என்பது தெரிந்தது. ஆனால் பலரும் இதை ஷேர் செய்து வருவதால், அது பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்த ஆய்வை தொடர்ந்தோம்.
மு.க.அழகிரிக்கு தனக்கு சமூக ஊடக பக்கங்களில் கணக்கு இல்லை என்று கடந்த மே மாதம் பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். மேலும் அவருடைய மகன் தயாநிதி அழகிரி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
இது தொடர்பாக துரை தயாநிதி வெளியிட்ட விளக்கம், செய்தியைத் தேடி எடுத்தோம். 2020 மே 11ம் தேதி ரஜினியின் கருத்தை மு.க.அழகிரி வரவேற்று ட்வீட் செய்ததாக செய்தி பரவியது. அப்போது மு.க.அழகிரியின் சமூக ஊடக பக்கம் இது இல்லை என்று தயாநிதி அழகிரி விளக்கம் அளித்திருந்த ட்வீட் நமக்கு கிடைத்தது. அது தொடர்பாக இந்து உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதையும் காண முடிந்தது.
இந்த நிலையில் மு.க.அழகிரி பெயரில் பரவும் பதிவில் உள்ள ஐடியை தேடி எடுத்தோம். அதில் மு.க.ஸ்டாலினை விமர்சித்திருந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவு இருந்தது. மு.க.அழகிரி தனக்கு சமூக ஊடகங்களில் பக்கங்கள் இல்லை என்று கூறிய நிலையில் இதை நடத்துவது யார் ன்று பார்த்தோம். அதில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக பொய்யான, போலியான கணக்கு என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதன் மூலம் மு.க. ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மீது உள்ள வெறுப்பு காரணமாக மு.க.அழகிரி கூறியதாக பொய்யான தகவலை பரப்பி வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மு.க.அழகிரி ட்வீட் வெளியிட்டதாக பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. தலைவர்கள் பெயரில் போலியான கணக்கு தொடங்குவதை சமூக ஊடக நிறுவனங்கள் தடுத்து நிறுத்துவதன் மூலம் இதுபோன்ற போலியான தகவல் பரவுவது தவிர்க்கப்படும்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:Fact Check: ஸ்டாலினை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறி மு.க.அழகிரி பெயரில் பரவும் போலி ட்வீட்
Fact Check By: Chendur PandianResult: False