
தேனி மக்களவைக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் செக்ஸ் வீடியோவில் சிக்கியதாக ஒன் இந்தியாவின் tamil.gizbot.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனும் சிக்கிவிட்டார் என்று நினைத்து சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தகவலின் விவரம்:
பெண்மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்!

அ.தி.மு.க-வின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவர் அ.ம.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் இவர் பாலியல் வீடியோவில் சிக்கினார் என்று ஒன் இந்தியாவின் tamil.gizbot.com ஏப்ரல் 11ம் தேதி இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி ஆன்லைன் இணையதளத்தில் இருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதால் இதனை உண்மை என நம்பி பலரும் அதிக அளவில் பகிரத் தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றவர். முதல்வர் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியவர். அ.தி.மு.க ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வரும் டி.டி.வி.தினகரனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதற்கிடையே டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த கதிர்காமு ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் மீது ஒரு பெண் புகார் அளித்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த விவகாரம் குறித்து கதிர்காமு மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். கதிர்காமு கூறுகையில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட பொய் புகாரின்பேரில் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் தலைமறைவாகிவிட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. நான் பெரிய குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.
இந்த புகார் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “எல்லாம் அரசியல் காரணங்களுக்காகவே நடக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவுக்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் மற்றும் பன்னீர்செல்வத்தின் தம்பிதான் காரணம்” என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த சூழ்நிலையில், அ.ம.மு.க-வில் மிக முக்கிய தலைவராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் செக்ஸ் வீடியோவில் சிக்கினார் என்ற tamil.gizbot.com செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியைப் படிக்க ஆரம்பித்தோம்.

“தன்னை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் அமமுக வேட்பாளர்கள் என்னுடன் பாலியல் உறவு கொண்டனர்” என்று தொடங்கியது அந்த செய்தி. இதன் மூலம் தங்க தமிழ்ச்செல்வன் தவறு செய்ததை நிரூபிக்க போதிய ஆதாரம் கிடைத்துவிட்டது என்றே tamil.gizbot.com செய்தி நம்மை நம்பும்படி செய்தது.
செய்திக்கட்டுரையின் லீடில், ‘அ.ம.மு.க வேட்பாளர் என்னுடன் பாலியல் உறவு கொண்டார் என்று இல்லை. வேட்பாளர்கள், கொண்டனர்,’ என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், கதிர்காமு மற்றும் தங்க தமிழ்ச்செல்வனைத்தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர் என்பது தெளிவானது.
தொடர்ந்து படித்த போதுதான் தலைப்பு மற்றும் செய்தியின் முதல் பத்தியில் மிகப்பெரிய தவறு செய்திருப்பது தெரிந்தது.
செய்தியின் சாரம் இதுதான்:
“பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு அ.ம.மு.க சார்பில் கதிர்காமு என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. அவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கதிர்காமுவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளும்படி தங்க தமிழ்ச்செல்வன் மிரட்டியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தங்க தமிழ்ச்செல்வன் மீதும் பெண்ணை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
“பெண் மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்!” – என்று தலைப்பு மற்றும் செய்தியின் முதல் பத்தியில் சொல்லியுள்ளனர். ஆனால், அதை நிரூபிக்கும் வகையில், பெண் ஒருவருடன் அ.ம.மு.க வேட்பாளர் கதிர்காமு இருக்கும் வீடியோவில் தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடம் பெற்றதற்கான வீடியோ பதிவு கிடைத்தது என்று எங்கேயும் இல்லை.

தலைப்பு மற்றும் லீடில் சொல்லியுள்ளதற்கு மாறாக, தங்க தமிழ்ச்செல்வன் பெண்ணை மிரட்டியதாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
தலைப்பு மற்றும் செய்தியின் தொடக்கத்தைப் படிக்கும் எல்லோருக்கும் புகார் அளித்த பெண்ணுடன் தங்க தமிழ்ச்செல்வனும் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்றே நினைக்கத் தோன்றும். அது தொடர்பான வீடியோ சிக்கியது என்று நம்பும் வகையில் கட்டுரையின் தலைப்பு மற்றும் தொடக்கம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கட்டுரையின் உள்ளே மிரட்டினார் என்று மட்டுமே புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தவறான தலைப்பு மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தது, தங்க தமிழ்ச்செல்வன் பற்றி அவதூறு பரப்பியது தெளிவாக தெரிகிறது.

ஒன் இந்தியாவின் tamil.gizbot.com என்பது அறிவியல், மொபைல் போன், ஆன்ட்ராயட், கம்ப்யூட்டர் என தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை அளிக்கக் கூடியது. இதில் ஏன் குற்றம் தொடர்பான செய்தியை வெளியிட்டனர் என்று தெரியவில்லை. இது இந்த செய்தியின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்புகிறது.

செய்தியை பரபரப்பாக அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தலைப்பு தவறாக வைக்கப்பட்டுள்ளது. தலைப்பை எழுதிய பிறகே லீட் எழுதியிருப்பது உறுதியாகிறது. நம்பகத்தன்மை இல்லாத இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள், தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:செக்ஸ் வீடியோவில் அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிக்கினாரா?
Fact Check By: Praveen KumarResult: False Headline
