தேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு

அரசியல் சமூக வலைதளம்

‘’வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இல்லாவிட்டாலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, 49ஏ பிரிவின்கீழ், சேலஞ்ச் ஓட்டு முறையில், உங்களின் வாக்கை பதிவு செய்யலாம்,’’ என்று ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இதில் உள்ள உண்மை என்னவென்று, ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
? When you reach poling booth and find that your name is #not_in_voter_list, just show your #Aadhar_card or #voter_ID and ask for ” #challenge_vote” under #section_49A and cast your vote.

? If you find that #someone has #already #cast your vote, then ask for “#tender_vote” and cast your vote.

?If any polling booth records more than 14% tender votes, #repolling will be conducted in such poling booth.

? Please #share this #very_important #message with maximum groups and friends as everyone should aware of their right to vote ??

Archived Link

இதில், ‘’வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காட்டி, 49ஏ பிரிவின்கீழ் சேலஞ்ச் ஓட்டு முறையில் வாக்கை பதிவு செய்யலாம். யாரேனும் உங்கள் பெயரில் ஓட்டு போட்டிருந்தால் அதனை மறுபரிசீலனை செய்து, உங்களின் ஓட்டை திருப்பி செலுத்தலாம். இவ்வாறு செலுத்தப்படும் டென்டர் ஓட்டுகள், 14 சதவீதம் அளவுக்கு ஒரு வாக்குச்சாவடியில் வரும்பட்சத்தில் அங்கே மறுதேர்தல் நடத்தப்படும். இந்த முக்கிய தகவலை தயவுசெய்து, அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
தற்போது இந்தியா முழுவதும், நாடாளுமன்ற தேர்தல் 2019 அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதி பங்கீடு செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசார பணிகளையும் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அவ்வப்போது, வதந்திகள் பரவுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதன் அடிப்படையில், மேற்கண்ட பதிவும், வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், விரிவான ஆய்வு நடத்தினோம். முதலில், இந்த பதிவில் உள்ளதுபோல, வேறு ஏதேனும் தொடர்புடைய செய்தி வெளியாகியுள்ளதா, என்று கூகுளில் தேடி பார்த்தோம்.

அப்போது, இதுபற்றி திநியூஸ்மினிட் வெளியிட்ட செய்தியின் விவரம் கிடைத்தது. ஆனால், அதில், போதுமான விவரம் கிடைக்கவில்லை. அந்த செய்தியை படிக்க விரும்பினால், நமது வாசகர்கள் இங்கே கிளிக் செய்யலாம். இதேபோல, வாட்ஸ்ஆப் குரூப்களிலும் இந்த தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

எனவே, நாம், இதுபற்றி அதிகாரப்பூர்வ ஆதாரம் கிடைக்குமா என, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி சென்று தேடி பார்த்தோம். அதில், தேர்தலின்போது, வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய வழிகாட்டி புத்தகத்தின் இணைப்பு கிடைத்தது. இவற்றை படிக்க இங்கே 1 மற்றும்
இங்கே 2 கிளிக் செய்யுங்கள். இதன்படி, இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விவரங்களை நமக்கு கிடைத்த இணைப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது கிடைத்த விவரங்கள் முற்றிலும் வேறாக உள்ளன. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்படி, மேற்கண்ட பதிவுடன், நமக்கு கிடைத்த ஆதாரங்களை ஒப்பிடுகையில், பிரிவு 49 ஏ என்பது ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கானது என்றும்; இதற்கும், ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி ஆதார் அல்லது வாக்காளர் அட்டை காட்டி ஓட்டு போடலாம் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முதலிலேயே தெரியவருகிறது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது. 49 ஏ என்பது எதுபற்றிய தேர்தல் விதிமுறை என்றுகூட தெரியாமல் இந்த பதிவை பகிர்ந்துள்ளனர்.

அடுத்தப்படியாக, ஒருவர் தனது ஓட்டை வேறு ஒருவர் ஏற்கனவே பதிவு செய்தது பற்றி நாம் கண்டுபிடித்து, மறுபடி ஓட்டுப் பதிவு செய்ய விரும்பினால், அதைச் செய்ய முடியும். அதற்கு தேர்தல் நடத்தை விதி 49பி மட்டுமே உதவுகிறது. இதன்படி பார்த்தால், இந்த பதிவில் உள்ள தகவல் பாதி உண்மையாகும்.

இதேபோல, கள்ள ஓட்டை தடுக்கவே 49பி கொண்டுவரப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவர் பேசிய வீடியோவின் இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

Archived Link

தேர்தல் அதிகாரிகள் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்தல், சந்தேகத்திற்கு இடமான வாக்குப்பதிவு உள்ளிட்டவற்றை எப்படி கண்காணிக்கலாம், என்பதற்கான விதிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், கள்ள ஓட்டு தொடர்பாக வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் செய்ய வேண்டியது பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுதவிர, கள்ள ஓட்டை தடுத்தல் மற்றும் வாக்காளரின் அடையாளம் மீதான சந்தேகம் உள்ளிட்டவற்றில், தேர்தல் அதிகாரிகளும், வாக்காளர்களும் செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றிய வீடியோ காட்சிகளும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தனது பெயரில் ஏற்கனவே ஒருவர் வாக்கு செலுத்தியிருந்தால், அதை தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறி, உரிய ஆதாரங்களை காட்டி நாம் வாக்கு செலுத்தலாம். ஆனால், நாம் செலுத்தும் வாக்கு, தனியாக சேகரித்து வைக்கப்படும். அவ்வாறு செலுத்தப்படும் மறுவாக்குகள் 14% ஆக ஆனால், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை. ஆனால், குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றி அல்லது தோல்வி வாய்ப்பு கணிசமான வாக்கு வித்தியாசத்தில் பாதிக்கப்பட நேரிட்டால் மட்டுமே, இந்த மறுவாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
2) 49 ஏ என்பது ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.
3) கள்ள ஓட்டு பற்றி 49 பி மட்டுமே விளக்குகிறது.
4) வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.
5) வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி வாக்காளர் அல்லது ஆதார் அட்டை காட்டினாலும், ஓட்டுப் போட முடியாது.
6) உங்கள் ஓட்டை யாரேனும் போட்டதாக தெரியவந்தால் முறையீடு செய்து, நீங்கள் மறு ஓட்டு போட முடியும்.
7) வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அட்டை கையில் இல்லை என்றால்தான், ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

எனவே, இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதில், நம் பெயரில் கள்ள ஓட்டு நடைபெற்றிருப்பதாக தெரியவந்தால், அதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்து, நாம் மீண்டும் ஓட்டுப் போட முடியும் என்பது மட்டுமே உண்மை. மற்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை என்று உரிய ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படுகிறது. ஆதார புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட பதிவில், உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:தேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு

Fact Check By: Parthiban S 

Result: Mixture