
பின்லாந்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற உத்தரவை அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived link 1 | Article Link | Archived Link 2 |
“தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை” என்று மாலை மலர் வெளியிட்ட செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Maalai Malar News தமிழ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகின் இளம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின். 34 வயதான பிரதமர் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்லாந்து மக்கள் மட்டுமின்றி, உலகமே சன்னா மரினை உற்றுநோக்கி வருகிறது.
இந்த நிலையில் பின்லாந்தில் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும்தான் வேலை… அதுவும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே வேலை என்று புது உத்தரவைப் பிரதமர் சன்னா மரின் பிறப்பித்தார் என்று செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.
tamil.samayam.com | Archived Link 1 |
tamil.goodreturns.in | Archived Link 2 |
மாலைமலர் மட்டுமின்றி பல முன்னணி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். மாலைமலர் வெளியிட்டிருந்த செய்தியில், “உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

சன்னா மரின் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை என்று உத்தரவிட்டாரா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது என்.டி.டி.வி, இந்தியா டுடே என பல முன்னணி ஊடகங்களும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தன. எனவே, இது உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது.
ndtv.com | Archived Link 1 |
dailymail.co.uk | Archived Link 2 |
அப்போது, இந்த செய்திகளுக்கு நடுவே bloomberg.com என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், இந்த தகவல் தவறானது என்று பின்லாந்து அரசு அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

Search Link | bloomberg.com | Archived Link |
அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், பின்லாந்தின் 34 வயதான பிரதமர் சன்னா மரின் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருந்தார். வாரத்துக்க நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வேகமாக பரவின. ஆனால், அதை மரின் அரசு மறுத்துள்ளது என்று கூறி, பின்லாந்து அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதில் வெளியான பதிவை ஷேர் செய்திருந்தனர்.
Archived Link |
அதில், “வாரத்துக்கு நான்கு நாட்கள்தான் பணி என்று பின்லாந்து அரசு எங்கும் குறிப்பிடவில்லை. பின்லாந்து அரசுக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. பிரதமர் சன்னா மரின் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு குழுக் கூட்டத்தில் அந்த கருத்தைக் கூறினார். தற்போது அப்படி எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
பின்லாந்து அரசின் ட்விட்டர் பக்கம் என்று உள்ளது… இதை யார் நிர்வகிக்கிறார்கள் என்று பார்த்தோம். அப்போது, இந்த பக்கத்தை பிரதமர் அலுவலகம்தான் நிர்வகிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம், பின்லாந்து அரசின் கருத்து என்பது பிரதமரின் கருத்தாகவே பார்க்கப்படுவது தெரிந்தது.

சன்னா மரினின் கடந்த கால பேச்சை எடுத்துப்போட்டு தற்போது அவர் வாரத்துக்கு நான்கு நாட்கள்தான் வேலை என்று பேசினார் என்று யாரோ கிளப்பிவிட்ட வதந்தியை உண்மை என்று நம்பி முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. சன்னா மரின் பின்லாந்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வருவது பற்றி ஆலோசித்தது உண்மைதான் என்று பின்லாந்து அரசு கூறியுள்ளது. ஆனால், தற்போது அவர் பிரதமராக பதவி ஏற்ற பிறகு வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை என்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை, அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெறவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், தமிழ் இந்து உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
hindustantimes.com | Archived Link 1 |
hindutamil.in | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில் பின்லாந்து அரசு வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு கிடைத்துள்ளது. அதில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை என்று கொண்டுவரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்திகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வாரத்தில் நான்கு நாள்தான் வேலை என்று அறிவித்தாரா பின்லாந்து பிரதமர்?
Fact Check By: Chendur PandianResult: False
