அருகில் மோடியை வைத்துக்கொண்டு அவரையே கலாய்க்கும் எச்.ராஜா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H Raja 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

மோடியின் பேச்சை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்கிறார். அப்போது அவர், "ஒரு நாட்டிலே அந்த நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டினுடைய எல்லைக்கு பாதுகாப்பு இல்லை. உள்நாட்டிலே இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அது குஜராத்தோ கேரளாவோ தமிழ்நாடோ. அந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இம்மாதிரி எதற்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அரசாங்கம் இருக்கிறது என்று சொன்னால், நம்முடைய முதல் கடமை என்னவென்று சொன்னால் அந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிய வேண்டியது நம்முடைய முதல் கடமையாக அமைந்திருக்கிறது" என்று கூறுகிறார்.

நிலைத் தகவலில், "தலைக்கு தில்லப்பார்த்தீங்களா?! பக்கத்தில் மோடியை வச்சிட்டு அவரையே கலாய்க்கிறாரூ" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Selva Kumar என்பவர் 2019 டிசம்பர் 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஆனால், மோடியை அருகில் வைத்துக்கொண்டு அவரையே கலாய்க்கிறார் எச்.ராஜா என்று கூறியிருப்பதன் மூலம் மோடி பிரதமராக பதவி ஏற்றபிறகு அவரை கலாய்த்து எச்.ராஜா பேசியதாகவே இதில் குறிப்பிடுகின்றனர்.

மேடையில் எச்.ராஜா பேசவில்லை. பார்க்கும்போது மோடி பேசியதற்கு மொழி பெயர்ப்பு செய்தது போலவே உள்ளது. அப்படி இருக்கும்போது மோடியை கிண்டல் செய்தார் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

வீடியோவில் மோடியை பார்க்கும்போது இப்போது உள்ளது போன்று இல்லை. எனவே, இது பழைய வீடியோ போல தெரிந்தது. தமிழகத்தில் எப்போது எல்லாம் மோடி பிரசாரம் செய்தார். அதை எச்.ராஜா மொழிபெயர்த்தார் என்று கண்டறிய கூகுளில், "தமிழகத்தில் மோடி பிரசாரம்" என்று டைப் செய்து தேடினோம். அப்போது, சில வீடியோக்கள் கிடைத்தன. அதில் ஒன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவோடு ஒத்துப்போனது.

H Raja 3.png
Search Link

அந்த வீடியோவை பாரதிய ஜனதா கட்சி 2013ம் ஆண்ட செப்டம்பர் 27ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்தது தெரிந்தது. அந்த வீடியோவை ஓப்பன் செய்து பார்த்தோம்.

ஒரு மணி நேரம் ஏழு நிமிடங்கள் ஓடும் வகையில் அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோவை பார்த்தோம். மோடியின் பேச்சை எச்.ராஜா மொழி பெயர்த்து வந்தார். 34வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வந்தது. அதில் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசை விமர்சித்து மோடி பேசுவது தெளிவானது.

Archived Link

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருந்த அந்த வீடியோவில் 26.09.2013 என்று தெளிவாக தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பகுதியை அப்படியே ஸ்மைலியைப் போட்டு மறைத்து வெளியிட்டுள்ளது தெரிந்தது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூட மோடியின் பேச்சை எச்.ராஜா மொழி பெயர்த்தார் என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

H Raja 4.png
Facebook LinkArchived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த வீடியோவில் எச்.ராஜா மொழி பெயர்ப்பு மட்டுமே செய்துள்ளது உறுதியானது.

2013ம் ஆண்டு அதாவது மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு நடந்த பொதுக் கூட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த மோடி அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசியது முழு வீடியோவைப் பார்க்கும்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேதியை மறைத்து, இப்போது ஆட்சியில் உள்ள மோடியை விமர்சித்து எச்.ராஜா பேசியது போன்று தவறான தகவல் பரப்பியுள்ளனர்.

நம்முடைய ஆய்வில், எச்.ராஜா மொழி பெயர்த்தது உண்மைதான். ஆனால், 2013ம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் உண்மையுடன் பொய்யான தகவலை சேர்த்தும், தேதியை மறைத்து இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியை கலாய்த்த எச்.ராஜா? - ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian

Result: Partly False