கையை புண்ணாக்கும் மிகக் கொடூர வைரஸ்: உண்மை அறிவோம்!

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

வித்தியாசமான பூச்சி ஒன்றைத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கை பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பூச்சியைத் தொட்டால் கை முழுக்க புண்ணாகிவிடும் என்று படத்துடன் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளனர். அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Water Bug 2.png

Facebook Link I Archived Link

முதுகு முழுக்க கூடு உள்ள வண்டு ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் அருகில், மனித கை ஒன்றின் படம் உள்ளது. அந்த கை, அந்த வண்டைப் போல முழுக்க, பொத்தல் பொத்தலாக ஓட்டைப் போட்டது போல பார்க்க கோரமான இருந்தது. 

படத்துக்கு மேல், “இந்த பூச்சிய பார்த்தால் கையாள் தொடவோ, அடிக்கவோ வேண்டாம். இதில் இருக்கிற வைரஸ் நம் கையில் பரவிவிடும். இது இந்தியாவில் நிறைய உள்ளது. இப்போது மழையில் இது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. தண்ணீரில் மிதந்து வரும். அதனால், இந்த பூச்சியை பார்த்தால் அதன் அருகில் கூட போக வேண்டாம். ஷேர் செய்யுங்கள்” என்று பேச்சு வழக்கில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த பதிவை, “அன்பால் இணைவோம் anbal inaivom” என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 1, 2019 அன்று பகிர்ந்திருந்தது.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில், இந்தியாவில் இது போன்று மிகக் கொடூரமான வைரஸ் கிருமி பாதிப்பு உள்ளதாக இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மழைக்கால பதிப்புகள் என்று பொதுவாக எலிக்காய்ச்சல், மலேரியா, டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை மட்டுமே டாக்டர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், மிகவும் புதிதாக மழைக்காலத்தில் இந்த பூச்சி அதிகம் பரவும்… அதைத் தொட்டாலே கை முழுக்க பூச்சியின் மேல் பகுதியில் உள்ளது போல் நம்முடைய கையும் பொத்தல் போட்டது போல் ஆகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சருமத்தில் ஏற்படக் கூடிய மிகக் கொடூரமான வைரஸ் தொற்றுகள் என்ன எல்லாம் உள்ளது என்று கூகுளில் தேடினோம். அப்போது மிகவும் கொடூரமான வைரஸ் கிருமித் தொற்று பற்றிய செய்தி கிடைத்தது. ஆனால், அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

எனவே, இது உண்மையா என்று அறிய பொது மருத்துவர் டாக்டர் பரணீதரனிடம் கேட்டோம். ”இது போன்று எந்த ஒரு வைரஸ் தொற்றையும் நான் கேள்விப்பட்டது இல்லை. இந்த வண்டிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தொட்டாலே பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எல்லாம் எந்த ஒரு மருத்துவ தகவலும் இல்லை. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுள் ஒன்றாக இருக்கலாம்” என்றார்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது வெறும் வதந்தி என்பதற்கான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (www.factcrescendo.com) இந்தி பிரிவு கூட இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்திக் கட்டுரை வெளியிட்டது தெரியவந்தது. ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

Water Bug 3.png

படத்தில் உள்ள பூச்சியின் பெயர் ‘மேல் ஜெயண்ட் வாட்டர் பக்’ (Male Giant Water Bug). இது பெண் வண்டைக் கவருவதற்காக அது இடும் முட்டைகளை தன்னுடைய முதுகில் சுமக்கும் பூச்சி வகை என்று தெரிந்து. ஆண் வண்டின் முதுகு பகுதியில் இருப்பது முட்டைகள்தான். அவை வைரஸ் தொற்று இல்லை. மேலும், இந்த வகை வண்டுகள் அபாயமற்றது என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

கையில் மிகவும் கொடூரமான தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அது, மெழுகைப் பயன்படுத்தி கையில் வித்தியாசமான தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்திய படம் என்று தெரிந்தது. இப்படி, பூச்சிகளால் பாதிக்கப்பட்டது போன்ற கையை உருவாக்குவது எப்படி என்று வீடியோவையே வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ படத்தையும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாத ‘மேல் ஜெயண்ட் வாட்டர் பக்’ படத்தையும் இணைத்து பீதியை ஏற்படுத்தும் வகையில் பதிவு உருவாக்கப்பட்டது தெரிந்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில், வண்டைத் தொட்டாலே பொத்தல் போட்டது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி ஏதும் இல்லை என்பது உறுதியானது.

படத்தில் உள்ள வண்டு மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதது என்பதுடன் அது தன்னுடைய முட்டைகளைச் சுமக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

கையில் பொத்தல் பொத்தலாக இருக்கும் படம், செயற்கையாக வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தண்ணீரில் மிதந்து வரும் வண்டை தொட்டாலே கைகள் பொத்தல் பொத்தலாக ஓட்டை போட்டது போல மாறிவிடும் என்ற ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கையை புண்ணாக்கும் மிகக் கொடூர வைரஸ்: உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False