பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதா?

வர்த்தகம்

‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Nagarajan Kk என்பவர் ஆகஸ்ட் 23, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வே காரணம் என குற்றச்சாட்டு. இன்னும் இந்த குட்டி செவரு எத்தனை பேரு வேலைய காவு வாங்கப் போகுதுன்னு தெரியல?’’ என்று எழுதப்பட்டுள்ளது. மெட்ராஸ் சினிமா படத்தில் வரும் காட்சி ஒன்றில் மோடியின் புகைப்படத்தை சித்தரித்து, இதில் இணைத்துள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தனது விற்பனை பாதித்துள்ளதாகவும், பார்லே நிறுவனம் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் பார்லே கேட்டகிரி ஹெட் மாயங் ஷா கூறியிருந்தார். இந்த நிலை நீடித்தால், 8,000 முதல் 10,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மாயங் ஷாவின் பேட்டியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், இதே செய்தியை ஜிஎஸ்டி காரணமாகவே பார்லே நிறுவனத்திற்கு இந்த நெருக்கடி என்று மாயங் ஷா கூறியதாகக் குறிப்பிட்டு நேஷனல் ஹெரால்ட் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனினும், இந்த செய்திகள் அனைத்திலுமே, 10,000 ஊழியர்கள் வரை ஆட்குறைப்பு செய்ய நேரிடலாம் என்று பார்லே நிறுவன அதிகாரி மாயங் ஷா கூறியதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகவோ அல்லது உடனே இதனை அமல்படுத்த போவதாகவோ எங்கேயும் குறிப்பிடவில்லை.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவிலோ 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, பார்லே முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு செய்திகள் இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவ தொடங்கியதை தொடர்ந்து, இதுபற்றி பார்லே சீனியர் கேட்டகிரி ஹெட் மாயங் ஷா மறுப்பு தெரிவித்து, விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதுதொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக, பார்லே நிறுவனம் எங்கேயும் கூறவில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை இவ்வாறு நடக்க நேரிடும், என்றுதான் பார்லே நிறுவன அதிகாரி மாயங் ஷா குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False