
பிரதமர் மோடி பதவி ஏற்பதை வெளிநாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஒரு பெரிய திரையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழா காட்சி ஒளிபரப்பாகிறது. அவர், பதவி ஏற்க தன்னுடைய பெயரைக் கூறியதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை, பாஜக-இராமநாதபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 30ம் தேதி வெளியிட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாட்டின் கடைசி கட்ட தேர்தல் முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பை லண்டனில் உள்ள ஒரு மது விடுதியில் மக்கள் கண்டு கொண்டாடுவது போன்று ஒரு வீடியோ பதிவு ஃபேஸ்புக்கில் பரவியது.
அது தொடர்பாக, தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ (tamil.factcrescendo.com) ஆய்வு மேற்கொண்டு அந்த வீடியோ பொய் என்று நிரூபித்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது, அதே வீடியோவில், பெரிய திரையில் பிரதமர் மோடி பதவி ஏற்கும் காட்சியை வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். மது விடுதியில் உள்ள பெரிய திரையில் எக்ஸிட்போல் முடிவு வெளியானதாக ஃபேஸ்புக்கில் பொய்யான வீடியோ பரவியபோது நாம் சில உண்மைகளை கண்டறிந்தோம்.
பெரிய திரை வீடியோ 2018ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்று நமக்கு தெரிந்தது. ஒரு கால்பந்தாட்ட போட்டியின் கோல் அடித்த தருணத்தின் கொண்டாட்டம்தான் அந்த வீடியோ காட்சி.
மேற்கண்ட ட்விட்டர் வீடியோவில் இங்கிலாந்து அணி விளையாடியதை காணலாம்.

வீடியோவில் இங்கிலாந்து கொடி இருந்ததை காணலாம். இதே கொடி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோவிலும் இருந்தது. இதன் மூலம் ட்விட்டரில் கிடைத்த வீடியோ அசலாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

இந்த வீடியோவை எடுத்து, பெரிய திரையில் காட்டப்படும் பால்பந்தாட்ட போட்டியை அகற்றிவிட்டு, அதில் பிரதமராக மோடி பதவி ஏற்கும் வீடியோவை வைத்திருப்பது உறுதியானது.

மோடி பதவி ஏற்பதைப் பார்த்து வெளிநாட்டினர் கொண்டாடும் வீடியோவைப் பார்க்கையில், எத்தனை முறைதான் போலி வீடியோ வெளியிடுவார்களோ என்ற சலிப்புதான் தோன்றியது. தவறு என்று நிரூபித்தாலும் தொடர்ந்து போலி வீடியோக்களை வெளியிட்டு மோடியின் பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்தி வருகின்றனர் என்று தோன்றுகிறது. இப்படி போலியான செய்தி, வீடியோக்களை வெளியிடுவதற்கு பதில், மோடி செய்த நல்ல விஷயங்களை பட்டியலிட்டாலே மக்களின் மனதில் இடம் பெற முடியும்.
நம்முடைய ஆய்வில், அசல் வீடியோ கிடைத்துள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோ பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்! –உண்மை அறிவோம்!
Fact Check By: Praveen KumarResult: False
