எக்ஸிட்போல் முடிவைக் கண்டு துள்ளிக் குதித்த லண்டன்வாசிகள்? – வேகமாக பரவும் வீடியோ!

அரசியல் சமூக ஊடகம்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று ஒளிபரப்பானதைக் கண்டு, லண்டனில் உள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக் குதித்ததாக ஒரு வீடியோவை பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

exit poll லன்டனில் , மக்களின் அதிரும் ஆரவாரம் பாருங்கள்????????

Archived link

ஒரு பெரிய திரையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று ஒளிபரப்பாவது போல உள்ளது. அதில், பா.ஜ.க 339 முதல் 368 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று அறிவிப்பு வந்ததும் மக்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். லண்டனில் இந்த நிகழ்வு நடந்ததாக 2019 மே 20ம் தேதி இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கல்யாணராமன் என்பவர் தெரிவித்துள்ளார்.

உண்மை அறிவோம்:

ஃபேஸ்புக்கில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாணராமன். இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு தகவல் பரப்பியதாக சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவதூறாக பேசவில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். இது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், கல்யாணராமன் ஓர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவைக் கண்டு லண்டன் மக்களின் ஆரவாரத்தை காணுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பற்றிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு வித்தியாசமாக இருந்தது. கேமராவின் நகர்வுக்கு ஏற்ப தொலைக்காட்சி திரை மட்டும் நகரவில்லை. பார்க்கும்போதே மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வை மேற்கொண்டோம்.

முதலில், இந்த குறிப்பிட்ட வீடியோ யாரால், எப்போது பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை ஆய்வு செய்தோம். அதில், கல்யாணராமன்தான் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது தெரிந்தது.

EXIT POLL 2.png

வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் எடுத்து www.yandex.com-ல் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவின் பல மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோஸ் கிடைத்தன.

EXIT POLL 3.png

சில மாதங்களுக்கு முன்பு அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் பட காட்சிகளை பப் ஒன்றில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவது போன்று ஒரு வீடியோ கிடைத்தது.

இன்னொரு வீடியோவில், கார்கள் அணிவகுத்துச் செல்லும்போது சைக்கிளில் ஒருவர் பாய்ந்து வந்து காரில் மோதி விழுவது போன்ற காட்சியைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்வது போன்று ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இதை மீம் உருவாக்கும் தளம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2018ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. ஒரு கால்பந்தாட்டப் போட்டியின் கோல் அடித்த தருணத்தின் கொண்டாட்டம் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட அந்த வீடியோ அசல்போல தெரிந்தது. அந்த வீடியோ கீழே…

Archived link

ட்விட்டர் பதிவு வெளியான ஜூலையில் ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. குறிப்பிட்ட தேதியில் எந்த நாடுகள் விளையாடின என்று தேடினோம். அப்பாது, குரோஷியா – இங்கிலாந்து இடையே அரை இறுதி போட்டி நடந்தது தெரிந்தது.

EXIT POLL 4.png

வீடியோவில் இங்கிலாந்து கொடி இருந்ததை காணலாம். இதே கொடி, கல்யாணராமன் வெளியிட்டிருந்த வீடியோவிலும் இருந்தது. இதன் மூலம் ட்விட்டரில் கிடைத்த வீடியோ அசலாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

EXIT POLL 5.png

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், பழைய வீடியோவை எடுத்து அதில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பை மார்ஃபிங் செய்து வைத்து பதிவேற்றம் செய்துள்ளது உறுதியாகிறது. இதன் மூலம், மேற்கண்ட வீடியோ பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எக்ஸிட்போல் முடிவைக் கண்டு துள்ளிக் குதித்த லண்டன்வாசிகள்? – வேகமாக பரவும் வீடியோ!

Fact Check By: Praveen Kumar 

Result: False