“திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்” - சுந்தர் பிச்சை பெயரில் பரவும் செய்தி உண்மையா?
திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட் தேர்வு என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
'வாட்ஸ் அப்'பில் வலம் வந்த செய்தி! என்று பத்திரிகையில் வெளியான ஒரு துணுக்கு செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதில், தமிழ் நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ, சுந்தர் பிச்சை படத்துடன் "நீட் எக்ஸாம் போன்ற ஒர தேர்வை எழுதியிருந்தால், என்னால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது. என் திறமைதான் என்னை வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்தது. 'நீட்' என்பது திறமைசாலிகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது" - சுந்தர் பிச்சை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 24ம் தேதி வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சை வந்ததில் இருந்து அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி-நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் பிச்சையிடம் இந்தியில் கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர், எனக்கு இந்தி தெரியாது… தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேளுங்கள் என்று கூறியதாகவும் வதந்தி பரவியது. அதை பொய் என்று நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோவில் உறுதி செய்திருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதைப் போல, நீட் தேர்வுக்கு எதிராக, மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக சுந்தர் பிச்சை குரல் கொடுத்ததாக சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக வதந்தி பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சீமானுக்கு எதிராக சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக கூட எச்.ராஜா ஒரு பதிவை வெளியிட்டு அழித்திருந்தார். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
முதலில் விடுதலை நாளிதழ் வெளியிட்ட தகவல் சமூக ஊடகத்தில் பரவியுள்ளதா என்று தேடினோம். அப்போது இந்த தகவல் தவறானது என்று ட்விட்டரில் ஒருவர் மேற்கண்ட நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தது கிடைத்தது.
நீட் தேர்வு பற்றி சுந்தர் பிச்சை கருத்து ஏதேனும் தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டு அடிப்படையில் ஏஷியா நெட் தமிழ் செய்தி ஒன்று வெளியிட்டதும் நமக்கு கிடைத்தது. அந்த செய்தியில், கூகுள் சிஇஓ, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏழை குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், தமிழக மருத்துவ மாணவர்களின் வலியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீட் தேர்வு என்பது பொது மக்களை மிரட்டும் வகையிலும், உண்மையிலேயே நல்ல திறமையுடையவர்களை அழிக்கும் வகையிலும் உள்ளது. நீட் போன்ற தேர்வை என்னைப் போன்றவர்கள் எழுத வேண்டியிருந்தால் கூகுள் சிஇஓ போன்ற ஓர் உயர்ந்த இடத்தை அடைந்திருக்க முடியுமா?
மாணவர்களது ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தியிருப்பது அரசுக்கு தீராத வெட்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அவர்களது உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவமானப்படுத்த இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியதாக தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
சுந்தர் பிச்சை பத்திரிகை செய்தி ஏதேனும் வெளியிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்தோம். சுந்தர் பிச்சை பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தால் அது உலகின் எல்லா நாடுகளில் உள்ள செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியும் கிடைக்கவில்லை. கூகுள் பிரஸ் கார்னர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு அறிக்கையும் நமக்குக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து கூகுளில் தேடியபோது, சுந்தர் பிச்சை பெயரால் பரவும் வதந்திகள் என்று hoaxorfact.com என்ற இணையதளம் வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வு கிடைத்தது. அதேபோல், www.edexlive.com என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியும் கிடைத்தது. அந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தோம்…
அதில் “நீட் தேர்வு தொடர்பாக சுந்தர் பிச்சை பெயரில் சமூக ஊடகத்தில் பரவும் நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். மிகவும் எழுத்து, வாக்கியப் பிழையோடு அந்த நியூஸ் கார்டு இருந்தது. மேலும், அதில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ இவ்வளவு தவறுகளோடு வெளியிட்டிருப்பாரா என்று சந்தேகம் எழுந்தது.
மேலும் இந்த நியூஸ் கார்டில் டென்மார்க்கில் உள்ள கோபெனாஹெகென் பல்கலைக் கழக பிரஸ் (Copenhagen University Press) மற்றும் தி பிசினஸ் ஆவுட்சைடர் (The Business Outsider) இதழ்களின் பெயரை குறிப்பிட்டிருந்தனர். இந்த இதழ்களில் சுந்தர் பிச்சை பேசியது தொடர்பாக ஏதேனும் வந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அப்படி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
சுந்தர் பிச்சையின் சமூக ஊடக பக்கத்தில் ஏதாவது கருத்து தெரிவித்துள்ளாரா என்று ஆய்வு செய்தோம். ஃபுட் பால் முதல் கூகுள் வரை பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்… ஆனால் தமிழ்நாடு நீட் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் அவர் வெளியிடவில்லை. இதன் மூலம் இந்த தகவல் பொய்யானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்திக் குறிப்பு என்று ஏஷியா நெட் வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளது. ஆனால், இந்த செய்திக் குறிப்பு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக கூகுள் சி.இ.ஓ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை தன்னுடைய ஃபேஸ்புக் ,ட்விட்டர் பக்கத்தில் கூட நீட் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் பகிரவில்லை என்று உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நீட் தேர்வு தொடர்பாக சுந்தர் பிச்சை கூறியதாக வெளியான தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:“திறமைசாலிகளை அழிக்க உருவாக்கப்பட்டது நீட்” - சுந்தர் பிச்சை பெயரில் பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False