எச்.ராஜா தெலுங்கானா போலீசாரை கேள்வி கேட்டாரா?

அரசியல் | Politics தமிழகம்

‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி பாத்து சுட முடியும் என்று கேள்வி கேட்ட எச்.ராஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim PostArchived Link

Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், எச்.ராஜா மற்றும் வடிவேலு புகைப்படத்தை கம்பேர் செய்து, அதன் மேலே, ‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி பாத்து சுட முடியும் -எச்.ராஜா,’’ என்றும், ‘’நாளை அதிகாலை 3 மணிக்கு நீ போ, சுட்டு காட்டுவாங்க,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பிரியங்கா ரெட்டி) என்பவர் கடந்த நவம்பர் 27ம் தேதி நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். இதன்பேரில், லாரி டிரைவர் முகமது ஆரிஃப் (26), நவீன், சிவா மற்றும் சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே 20 முதல் 26 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவர். திஷாவை அடித்துக் கொன்றுவிட்டு, பலாத்காரம் செய்து பிறகு, சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, டெமோ காட்டும்படி போலீசார் முயற்சி எடுத்தனர். இதன்படி, நேற்று (டிசம்பர் 6) குற்றவாளிகளை அழைத்துச் சென்றபோது, ஆரிஃப் எனும் குற்றவாளி, போலீசாரின் துப்பாக்கியை பறிமுதல் செய்து, போலீசாரை சுட முயன்றதாகவும், இதர 3 பேர் கற்களை வீசி போலீசாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மற்ற இதையடுத்து, போலீசார், அந்த 4 பேரையும் தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர்.

TOI Link News18 Link IndiaToday Link

இந்த விவகாரம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாராட்டுகளும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உண்மையிலேயே என்ன சொன்னார் என விவரம் சேகரித்தோம்.

முதலில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (@HRajaBJP) பக்கம் சென்று இப்படி ஏதேனும் பதிவு வெளியிட்டுள்ளாரா என தேடினோம். அப்போது, ஐதராபாத் என்கவுன்டரை ஆதரித்து அவர் வெளியிட்ட பதிவின் விவரம் கிடைத்தது. இதை வைத்துப் பார்த்தால், அவர் மேற்கண்ட என்கவுன்டர் விவகாரத்தில் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என தெளிவாகிறது. 

Archived Link

இதேபோல, அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@HRajaBJP) சென்று தகவல் தேடினோம். அதிலும், மேற்கண்ட கருத்தே இடம்பெற்றிருந்தது. 

H.Raja Facebook Post LinkArchived Link

இறுதியாக, எச்.ராஜா தரப்பில் இந்த ஃபேஸ்புக் தகவல் பற்றி விளக்கம் கேட்க முயற்சித்தோம். பாஜக தமிழக ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு விசாரித்தபோது, இதுதொடர்பாக, எச்.ராஜாவிடம் விசாரித்து உறுதி செய்வதாக, தெரிவித்தனர். சில மணி நேரங்களில் மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட அவர்கள், ‘’இதனை எச்.ராஜா மறுத்துள்ளார். எச்.ராஜா பெயரில் வதந்தி பரப்புவதை சிலர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த ஃபேஸ்புக் வதந்தியும்,’’ என தெரிவித்தனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) எச்.ராஜா, ஐதராபாத் என்கவுன்டரை ஆதரித்தே பேசியுள்ளார். அவர் எங்கேயும் இதுபற்றி தெலுங்கானா போலீசாரை கேள்வி கேட்கவில்லை.
2) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை எச்.ராஜாவே பார்வையிட்டு, போலியானது என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:எச்.ராஜா தெலுங்கானா போலீசாரை கேள்வி கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False