
‘’கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது, கற்பூர தட்டின் மேல் கையை காட்டினால் ஆபத்து ஏற்படும்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஆகஸ்ட் 4, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கொப்புளமாக உள்ள 2 கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ எச்சரிக்கை…😱 எச்சரிக்கை…😱 கோயில்களுக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் Hand Sanitizerஐ பயன்படுத்தினால், கற்பூரத் தட்டுக்கு மேலே உங்கள் கைகளைக் காட்ட முயற்சிக்காதீர்கள்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பலரையும் அச்சப்படுத்தியுள்ள சூழலில், ஹேண்ட் சானிட்டைசர் எனப்படும் கைகளை சுத்தம் செய்யும் ரசாயனத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அந்த சானிட்டைசர்களை பயன்படுத்துவதால், சிலருக்கு அலர்ஜி, கைகளில் புண் ஏற்படுதல் போன்ற பிரச்னை உண்டாகிறது. எனவே, சானிட்டைசருக்கு மாற்றாக, சோப்பு, டெட்டால் திரவம் பயன்படுத்தி கை கழுவுதல் உள்ளிட்ட யோசனைகளை மக்கள் பின்பற்றுகின்றனர்.
அதேசமயம், சானிட்டைசர் பயன்படுத்தி விட்டு, கைகளை வேறு ஏதேனும் நெருப்பு சார்ந்த பொருள் அல்லது சூடான பொருள் மீது காட்டினால் கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் தகவல் பகிர தொடங்கியுள்ளனர். அப்படியான வதந்திகளில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும்.
முதலில், இவர்கள் கூறியுள்ளது போல, ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்தினால் தீப்பிடிக்குமா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். சானிட்டைசரில் கலந்துள்ள ஆல்கஹால் காரணமாக, தீப்பிடிக்கும் என்று முழுதாகச் சொல்லிவிட முடியாது.
சானிட்டைசர் பாட்டில்களை சூடான இடத்தில் ஸ்டோர் செய்து வைத்தால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அவற்றின் மீது நீண்ட நேரம் நேரடியாக வெயில் அல்லது தீ பட்டால், தீப்பிடிக்கக்கூடும். மற்றபடி, கைகளில் தேய்த்துக் கொண்டு, அதன் ஈரம் காய்ந்துவிட்டால், மீண்டும் நெருப்பின் மீது கைகளை காட்டினால், தீப்பற்ற வாய்ப்பில்லை.
இதுதொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கைகளில் சானிட்டைசரை தேய்த்துக் கொண்டால், சில நிமிடங்கள் அதனை உலர விட வேண்டும். அதன் பிறகு, தீ பட்டாலும் கைகளில் தீப்பிடிக்க வாய்ப்பில்லை. காரணம், சானிட்டைசரில் கலந்துள்ள ஆல்கஹால் கைகளில் தேய்த்து உலர விடும் நேரத்தில், ஆவியாகிவிடும். கைகளில் சானிட்டைசர் தடவிய உடனே நெருப்பின் மீது கையை காட்டினால் கண்டிப்பாக தீப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது.
சரியான உபயோகிக்கும் முறையை பின்பற்றினால் போதும். இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மற்றபடி, இதுபோன்ற ஃபேஸ்புக் வதந்திகளை நம்பாதீர்.
மேலும், இவர்கள் பகிர்ந்துள்ள எச்சரிக்கை புகைப்படம் என்னவென்று பார்த்தால், அது தீக்காயம் தொடர்பானது இல்லை. Dyshidrotic Eczema என்ற நோய் பாதிப்பால் ஏற்படக்கூடியதாகும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) சரியான முறையில் தயாரிக்கப்பட்ட சானிட்டைசர் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
2) சானிட்டைசரில் கலக்கப்படும் ஆல்கஹாலின் அளவை பொறுத்தும், அவை ஸ்டோர் செய்து வைக்கப்படும் இடத்தின் தன்மையை பொறுத்தும் சில நேரங்களில் சானிட்டைசர் பாட்டில் தீப்பற்றி எரியக்கூடும்.
3) சானிட்டைசர் பயன்படுத்தி, சில நொடிகள் கைகளை உலர விட வேண்டும். அப்போது, சானிட்டைசரில் உள்ள ஆல்கஹால் எளிதில் ஆவியாகிவிடும். அதன்பிறகு, கைகளை நெருப்பின் மீது காட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
4) சானிட்டைசரை சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். பயன்படுத்தும் முறையில்தான் பிரச்னை ஏற்படும். மற்றபடி சானிட்டைசர் கையில் பட்டதாலேயே, கற்பூர தீபம் அல்லது எந்த தீப்பொறியும் காயம் ஏற்படுத்தாது.
5) இந்த புகைப்பட பதிவு என்றில்லை; சானிட்டைசர் பயன்படுத்தியதால் கையில் தீக்காயம் ஏற்பட்டது என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பெரும்பாலான புகைப்படங்கள் தவறானவையே. சமூக வலைதள பயனாளர்களுக்கு தேவையற்ற பீதி, அச்சம் தரும் நோக்கில் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது; பீதி கிளப்பும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
