
நாடே கொரோனா ஊரடங்கால் அவதியுறும் நிலையில் பிரதமர் மோடி போட்டோ ஷூட் நடத்தினார் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரதமர் மோடியின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நாடே கொரோனோ ஊரடங்கால் நாசமாகி, கிடைக்கையில் இவனுக்கு போட்டோஷூட் ஒரு கேடா..?
இரக்கமற்ற அரக்க மிருகத்தனம் குணம் கொண்ட ஒருவனுக்குத்தான் இது போல செய்ய தோன்றும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Satheesh Kumar என்பவர் 2020 ஆகஸ்ட் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி மயில்களுடன் இருக்கும் புகைப்படம், வீடியோ பதிவை ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட்டார். அதை வைத்து பிரதமர் மோடியை பலரும் விமர்சித்து வருகின்றனர். பிரதமர் காலையில் உடற்பயிற்சி செய்யும் போது மயில்களுக்கு உணவு அளிக்கும் காட்சிகளை அவரது புகைப்பட கலைஞர் படம்பிடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புடன் இந்தி கவிதை ஒன்றையும் வைத்து மோடி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
திடீரென்று மரத்தடியில் அமர்ந்து பிரதமர் மோடி செய்தித்தாள் படிப்பது போன்ற படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினர். அதனுடன், கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நேரத்தில் இது தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பதிவுகளைப் பார்க்கும்போது பிரதமர் மோடி இந்த புகைப்படத்தை தற்போது எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், பிரதமர் மோடியின் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதை படத்தை உற்று கவனித்தால் தெரிந்துகொள்ளலாம். எனவே, மரத்தடியில் புத்தகங்கள், லேப்டாப் மத்தியில் பிரதமர் மோடி செய்தித்தாள் படிக்கும் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2012ம் ஆண்டு இந்த படத்தை இணையதளம் ஒன்று பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. அதாவது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டவை என்பது தெரிந்தன. குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் சன்டே கார்டியன் என்ற ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. அதற்காக அவர்கள் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர். மோடி ஒபாமாவின் புத்தகத்தை படிக்கும் ஒரே ஒரு படத்தை மட்டுமே அதில் வைத்திருந்தனர்.

அதே நேரத்தில் கட்டுரையாளர் தன்னுடைய பிளாக்கில் அதே நாளில் (2012 ஜனவரி 8ம் தேதி) அந்த கட்டுரையை வெளியிட்டு மோடியின் இதர படங்களையும் வைத்திருந்தார். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட படத்தை இப்போது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டதாக, தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கொரோனா காலத்தில் போட்டோஷூட் நடத்தினாரா மோடி; இது பழைய படம்!
Fact Check By: Chendur PandianResult: False
