வீட்டைவிட்டு ஓடி வந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் சிக்கினாரா இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, தன் இளம் வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்து, டிக்கெட் இல்லாமல் ரயலில் பயணம் செய்து, டிடிஇ-யிடம் சிக்கினார் என்றும், பின்னர் படித்து உயர்ந்த இடத்தை அடைந்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான நாராணயமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவருமான சுதா மூர்த்தியின் புகைப்படத்துடன் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் பணியில் இருந்த TTE (Train Ticket Examiner) இருக்கைக்கு அடியில் மறைந்திருந்த ஒரு பெண்ணைப் பிடித்தார். அவளுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும். TTE அந்த பெண்ணிடம் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறினார். அந்தச் சிறுமி தன்னிடம் டிக்கெட் இல்லை என்று தயங்கித் தயங்கி பதிலளித்தாள். TTE உடனடியாக அந்த பெண்ணை ரயிலில் இருந்து இறங்குமாறு கூறினார்.

திடீரென்று, பின்னால் இருந்து ஒரு குரல், “அவளுக்கு நான் பணம் தருகிறேன்.” தொழில் ரீதியாக கல்லூரி விரிவுரையாளராக இருந்த திருமதி உஷா பட்டாச்சார்யாவின் குரல் அது.

திருமதி பட்டாச்சார்யா அந்தப் பெண்ணின் டிக்கெட்டைப் பணம் கொடுத்து, அவளை அருகில் உட்காரச் சொன்னார். அவள் பெயர் என்ன என்று கேட்டாள். “சித்ரா”, அந்த பெண் பதிலளித்தாள். “நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?”

“நான் செல்ல எங்கும் இல்லை,” என்று பெண் கூறினார்.

“அப்படியானால் என்னுடன் வா.” திருமதி பட்டாச்சார்யா அவளிடம் கூறினார். பெங்களூரு சென்றடைந்த பிறகு, திருமதி பட்டாச்சார்யா சிறுமியை ஒரு NGO வசம் ஒப்படைத்தார். பின்னர் திருமதி பட்டாச்சார்யா டெல்லிக்கு மாறினார், இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகளை இழந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமதி பட்டாச்சார்யா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.

அவள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் முடித்த பிறகு, அவள் பில்லைக் கேட்டாள், ஆனால் அவளுடைய பில் ஏற்கனவே செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அவள் திரும்பிப் பார்த்தபோது, ​​கணவனுடன் ஒரு பெண் தன்னைப் பார்த்து சிரித்தாள். திருமதி பட்டாச்சார்யா தம்பதியினரிடம், “எனக்கு ஏன் கட்டணம் செலுத்தினீர்கள்?”

அதற்கு அந்த இளம்பெண், “மேடம், மும்பையில் இருந்து பெங்களூர் செல்லும் அந்த ரயில் பயணத்திற்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தை ஒப்பிடுகையில், நான் செலுத்திய பில் மிகவும் குறைவு. இரு பெண்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. “ஐயோ சித்ரா… நீ தான்…!!!” திருமதி பட்டாச்சார்யா மகிழ்ச்சியுடன் வியந்து கூறினார்

ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி, “மேடம் என் பெயர் இப்போது சித்ரா இல்லை. நான் சுதா மூர்த்தி. மேலும் இவர் என் கணவர்… நாராயண மூர்த்தி” என்றாள். 

ஆச்சரியப்பட வேண்டாம். இன்ஃபோசிஸ் லிமிடெட் தலைவர் திருமதி சுதா மூர்த்தி மற்றும் பல மில்லியன் இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண் மூர்த்தி ஆகியோரின் உண்மைக் கதையைப் படிக்கிறீர்கள். ஆம், மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய உதவி அவர்களின் முழு வாழ்க்கையையும் மாற்றிவிடும்!

“துன்பத்தில் இருப்பவர்களுக்கு நல்லது செய்வதை தயவு செய்து தடுக்காதீர்கள், உதாரணமாக, அதைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது”. உங்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்த்துக்கள்… இந்தக் கதைக்குள் சற்று ஆழமாகச் சென்றால்…

அக்ஷதா மூர்த்தி இந்த தம்பதியின் மகள் மற்றும் இங்கிலாந்தின் பிரதமரான ரிஷி சுனக்கை மணந்தார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Saravana Pandian என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 31ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இன்ஃபோசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி பற்றி சமூக ஊடகங்களில் அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தன்னம்பிக்கை கதைகள் என்ற அளவில் பகிரப்படும் இந்த கதைகளில் துளி கூட உண்மை இல்லாமல் இருப்பதுதான் வேதனை. அந்த வகையில் இளம் வயதில் சுதா ராமமூர்த்தி வீட்டைவிட்டு ஓடி வந்த பெண் என்றும், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப் படித்து, பொறியாளராக உயர்ந்து, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியைத் திருமணம் செய்தார் என்றும் ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

உண்மைப் பதிவைக் காண: qz.com I Archive 1 I hindustantimes.com I Archive 2

சுதா ராமமூர்த்தி தன்னை பற்றிக் குறிப்பிடுகையில், தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் என்றும், தன்னுடைய தந்தை ஒரு மருத்துவர் என்றும் அவர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் என்றும், தன்னுடைய தாயார் ஒரு பள்ளி ஆசிரியை என்றும் முன்பு கூறியிருந்தது நினைவிலிருந்ததால், இந்த கதை மீது சிறிது கூட நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே, அவரது பின்னணி பற்றித் தேடினோம். தன்னுடைய ப்ரீ காலேஜ் படிப்பை (நம் ஊரில் பிளஸ் 2) மிக சிறப்பான மதிப்பெண்ணுடன் நிறைவு செய்தேன் என்று அவர் கூறியதை காண முடிந்தது. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கதையில் சிறுமியின் வயது 13 – 14 எனக் குறிப்பிட்டிருந்தனர். 17 வயதில்தான் ப்ரீ காலேஜ் படிப்பை முடிக்க முடியும். இதன் மூலம் இந்த கதை சுதா மூர்த்தியின் சொந்தக் கதை இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சுதா மூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் பார்த்தோம். சில ஊடகங்களில் அவர் பேட்டியாக, தகவலாக செய்தி வெளியாகி இருந்தது. அவை எவற்றிலும் சுதா, இளம் வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப் படித்தவர் என்று குறிப்பிடவில்லை.

பின்னர் இந்த கதை எப்படிப் பரவியது என்று அறிய, சுதா மூர்த்தி, பம்பாய் – பெங்களூர் ரயில் பயணம், சித்ரா என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, சுதா மூர்த்தி எழுதிய சிறுகதை ஒன்றை மாற்றி, சுதா மூர்த்தியின் வாழ்க்கை கதை போலப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடிய போது, சுதா மூர்த்தியின்  ‘The Day I Stopped Drinking Milk’ என்ற புத்தகத்தில் இந்த கதை இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த புத்தகம் அமேசானில் விற்பனைக்கு இருப்பதும் தெரிந்தது. எனவே, அதன் பிடிஎஃப் வடிவம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். நமக்குக் கிடைத்தது. அந்த புத்தகத்தின் முதல் கதையே “Bombay to Bangalore” தான். அந்த கதையைப் படித்துப் பார்த்தோம். அந்த சிறுகதையைத்தான் ஒரு பக்க கதை போல மாற்றி சுதா மூர்த்தியின் கதை என்பது போல பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: pdflake.com I Archive

அந்த கதையில் சித்ரா என்ற சிறுமி தன் வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். அவரது தந்தை கூலி தொழிலாளி என்றும். தாயார் சித்ரா பிறந்ததும் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப் படித்து, கம்ப்யூட்டர் படிப்பு படித்து வெளிநாட்டில் வேலை செய்பவராக அவரை காட்டியிருப்பார்கள். அவர் ஜான் என்பவரை தன்னுடைய வாழ்க்கைத் துணைவராகத் தேர்வு செய்திருப்பார் என்று கதையை முடிப்பார்கள். இந்த கதையை மாற்றி, பெயரை மாற்றி நாராயண மூர்த்தியைத் திருமணம் செய்தார் என்று பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதன் மூலம் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி எழுதிய சிறுகதையை மாற்றி சுதா மூர்த்தியின் உண்மைக் கதை என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் என்றும், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து முன்னேறினார் என்றும் பரவும் கதை தவறானது என்பதை தகுந்த  ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வீட்டைவிட்டு ஓடி வந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் சிக்கினாரா இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply