
சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி காலணி நிறுவனங்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டே வாழ்ந்த “சாவர்க்கர் பிறந்தநாளை” முன்னிட்டு பிரபல காலணி நிறுவனங்களான அடிடாஸ், விகேசி ஆகியவை வாழ்த்து செய்திகளை வெளியிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை அண்ணன் தமிழன் பிரசன்னா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vijay Chetpet என்பவர் 2020 மே 29ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்லவில்லை. இந்த நியூஸ் கார்டு உண்மையா, அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். சாவர்க்கரை நய்யாண்டி செய்யும் வகையில் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருக்கலாம், என்று தெரிகிறது. ஆனால், பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டு, நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போலவே கிட்டத்தட்ட அதன் பின்னணி வாட்டர் மார்க் லோகோ அனைத்தையும் வைத்து வெளியிட்டுள்ளனர். அதனால், இது உண்மை என்று நம்பி ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக ஊடக பக்கங்களில் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால், வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் தமிழ் ஃபாண்ட் இது இல்லை. உறுதி செய்ய மே 28, 2020 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில் மேற்கண்ட நியூஸ் கார்டு இல்லை.

ஒருவேளை நிறுவனங்கள் வாழ்த்து செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அடிட்டாஸ் ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த பதிவும் வெளியாகவில்லை. சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 வரையிலான காலக்கட்டத்தில் சாவர்க்கர் பற்றி எந்த ஒரு பதிவும் அதில் இல்லை.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவுக்கு அனுப்பி சரிபார்க்க கேட்டோம். அதற்கு அவர்கள் இது போலியான நியூஸ்கார்டு, நாங்கள் வெளியிட்டதை எடிட் செய்துள்ளார்கள் என்றனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
