ராஞ்சி துப்பாக்கிச்சூடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

ராஞ்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு தான் காரணம் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராஞ்சி போராட்டம் தொடர்பான புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் மாநிலம் ராஞ்சியில் காவி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லிம்கள் பலி! ராஞ்சி – ஜார்கண்ட் 10.6.22 நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய மிருகங்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை; நியாயம் கேட்டுப் போராடிய முஸ்லிம்கள் காவல்துறையால் படுகொலை!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Syed ibrahim.m.s என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களாக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் இஸ்லாமியர்கள் இறைத்தூதர் முகமது நபி பற்றி அவதூறாகப் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ராஞ்சியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். 

உண்மைப் பதிவைக் காண: financialexpress.com I Archive

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க தான் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை ஜார்க்கண்ட் முக்தி மோட்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் ஆட்சி செய்து வருகிறார். 2019ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. அப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பா.ஜ.க அரசு காரணம் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்று ஆய்வு செய்தோம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லை, ஹேமந்த் சோரன்தான் முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டினோம். 2019ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்று தகவல் கிடைத்தது. தற்போது அங்கு ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருவதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive

மேலும் துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்தது. மேலும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கேட்டுக்கொண்ட செய்தியும் கிடைத்தது. இவை எல்லாம் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சாதான் ஆட்சியில் இருக்கிறது என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில், ராஞ்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு இஸ்லாமியர்கள் உயிரிழப்புக்குக் காரணம் ஜார்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க தான் காரணம் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராஞ்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு, இரண்டு இஸ்லாமியர்கள் மரணத்துக்கு ஜார்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க தான் காரணம் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராஞ்சி துப்பாக்கிச்சூடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply