2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?
“2020ல் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன்” - என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் "2021ல் நான் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன் - மு க ஸ்டாலின் ஆவேசம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பாஜக இளைஞர் அணி - தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sundar G என்பவர் 2020 ஆகஸ்ட் 29ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. தமிழ் ஃபாண்ட், டிசைன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. இவர்களாக ஒரு பதிவை உருவாக்கி அதில் தந்தி டி.வி லோகோவை வைத்து பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
கைலாசா நாட்டுக்கு செல்வேன் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூற வாய்ப்பே இல்லை. இருப்பினும், 2021ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன், வெளிநாடு செல்வேன் என்று ஸ்டாலின் ஏதாவது கருத்து தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு கருத்தையும் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. இது நக்கல் நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட பதிவாக இருக்கலாம்... இருப்பினும் இதை பலரும் உண்மை என்பது போலக் கருத்திட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.
பலரும் இந்த பதிவு பற்றி தொடர்ந்து புகார் அளித்து வரவே, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
தந்தி டி.வி இணைய - சமூக ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு இது பற்றி கூறியபோது, இது போலியானது, இது பற்றி எங்கள் சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளோம் என்றனர். அவர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவின் இணைப்பையும் நமக்கு அனுப்பினர்.
இதன் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டி.வி பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False