கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா?

Coronavirus உலகச் செய்திகள் | World News மருத்துவம் I Medical

‘’உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை கியூபா அனுப்பியுள்ளது,’’ என்று பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதே தகவலை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்வதை காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
இதில், ‘’கியூபாவிற்கு உலக நாடுகள் ஒருகாலத்தில் உதவவில்லை. அதன்பின், பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நன்கு திட்டமிட்டு அந்நாட்டில் மருத்துவ சேவையை மேம்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தற்போதைய கொரோனா வைரஸ்க்கு கியூபா மருத்துவர்கள்தான் உலகம் முழுவதும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை கியூபா பெற்றுள்ளது, அந்நாட்டின் சார்பாக, தற்போது உலகம் முழுவதும் 2 லட்சம் மருத்துவர்கள் சேவை செய்கிறார்கள்,’’ என்று நீளமாக கட்டுரை எழுதியுள்ளனர். 

குறிப்பாக, கியூபா சார்பாக உலகில் உள்ள 95 நாடுகளில் 2 லட்சம் மருத்துவர்கள் சேவை செய்கிறார்கள் என்ற செய்தி, பலராலும் அதிகளவில் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இதை வைத்துத்தான் மேற்கண்ட செய்தியை படிக்கும் பலரும் அடேங்கப்பா எவ்வளவு பெரிய விசயம் என்று வாயை பிளக்க நேரிடுகிறது. நாமும் முதலில் இதைப் பார்த்ததும் உண்மையாக இருக்குமோ என்று நினைத்தோம். 

ஆனால், ஒரு கோடிக்கும் சற்று அதிகமான மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள கியூபாவில் இருந்து எப்படி 2 லட்சம் டாக்டர்கள் உலகம் முழுக்க பணிபுரிய சென்றிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. 

கியூபாவில் எவ்வளவு மருத்துவர்கள் உள்ளனர் என்ற தகவல் தேடினோம். இதன்படி, குடும்ப நல மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் என சுமார் 10,000 பேருக்கு, 67 டாக்டர்கள் கியூபாவில் உள்ளனர். இப்படியாகக் கணக்கிட்டால், சுமார் 1 கோடி பேருக்கு தோராயமாக, 75,000 முதல் 90,000 வரையான மருத்துவர்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.  

WHO Link 1WHO Link 2

இதனை உறுதி செய்வது போல மேலும் சில தகவல் விவரங்களை சேகரித்துள்ளோம். அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Statista.com LinkWHO Link

இதன்படி, கியூபாவில் சுமார் 95,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் என்று தெளிவாகிறது. உள்நாட்டிலேயே இவ்வளவுதான் எனும்போது, உலக அளவில் எவ்வளவு மருத்துவர்கள் கியூபா சார்பாக பணிபுரிகிறார்கள் என்று தகவல் தேடினோம். அப்போது, சுமார் 50,000 டாக்டர்கள் கியூபா சார்பாக, 67 நாடுகளில் பணிபுரிகிறார்கள் என்ற விவரம் கிடைத்தது. 

BBC LinkArchived Link
TIME Link Archived Link 

இறுதியாக, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகம் Granma.cu இதுபற்றி என்ன சொல்கிறது என்ற விவரம் தேடினோம்.

இதுதொடர்பாக Granma வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பின் விவரம் கிடைத்தது. அதில், உலகம் முழுக்க மொத்தம் 4,00,000 சுகாதாரப் பணியாளர்களை கியூபா அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் எனில், அவர்களில் மருத்துவர்கள் சுமார் 50,000 பேர் மட்டுமே. எஞ்சியவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள், மருந்தாளுனர்கள் இப்படி பலர் அடங்குவர். 

Granma.cu Link Archived Link 
Nationalinterest.org Link Archived Link 

கியூப அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் வெளியிட்ட செய்தியே போதும். மொத்தம் 164 நாடுகளில் கியூபா தரப்பில் 4 லட்சம் சுகாதார பணியாளர்கள் பணிபுரிகிறார்கள், இவர்களில் டாக்டர்கள் மட்டும் சுமார் 50,000 பேர் வரை உள்ளனர். 

எனவே, 95 நாடுகளில் 2 லட்சம் கியூப டாக்டர்கள் பணிபுரிகிறார்கள், என்ற தகவலில் முழு உண்மை இல்லை என்று தெளிவாகிறது. மேலும், கியூப அரசு இதனை கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியான முறையில் செயல்படுத்தியுள்ளது. ஒரே ஆண்டில் இப்படி செய்திடவில்லை.

கொரோனா வைரஸ் போன்ற மருத்துவ நெருக்கடி நிலவும் காலத்தில் இத்தகைய மருத்துவச் செய்திகளில் பகிரப்படும் உண்மை, பொய் பற்றி கணக்கில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இவற்றால் சாமானிய மக்கள் தவறாக வழிநடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். இதுபோன்ற முழு உண்மை இல்லாத மருத்துவச் செய்திகளை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

1 thought on “கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா?

Comments are closed.