முருங்கைக் கீரையால் புற்றுநோய் வருமா… தலைப்பால் வந்த குழப்பம்!

மருத்துவம் I Medical லைஃப்ஸ்டைல்

முருங்கை இலையால் புற்றுநோய் வந்த ஆபத்து என்று ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி வைரல் ஆனது. முருங்கை இலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. பல நோய்களை குணமாக்கும் தன்மை முருங்கை கீரைக்கு உண்டு. அப்படி இருக்கையில் முருங்கை இலையால் புற்றுநோய் வருமா என்று அதிர்ச்சி அடைந்தோம். முருங்கைக் கீரையால் புற்றுநோய் வருமா… அப்படி ஏதேனும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறதா என்று நம்முடைய ஆய்வைத் தொடங்கினோம்.

செய்தியின் விவரம்

லங்காபுரி என்ற இணையத்தில், மார்ச் 17ம் தேதி முருங்கைக் கீரை தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அதற்கு அவர்கள் வைத்திருந்த தலைப்பு…

அண்மைய ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலையால் புற்றுநோய் வந்த ஆபத்து

(கீழே உள்ள ஆதார புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை பார்க்கவும்)

Archive link

இதை அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி இருந்தனர். பதிவிட்ட சிறிது நேரத்திலேயே சில நூறு ஷேர்களை அது கடந்திருந்தது.

உண்மை அறிவோம்

இன்றைக்கு உலகின் மிக மோசமான பாதிப்பாக புற்றுநோய் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய நோய் என்பதால் புற்றுநோய் பற்றிய அச்சம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த சூழலில், முருங்கைக் கீரையால் புற்றுநோய் வந்த ஆபத்து என்று தலைப்பைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் அதை அப்படியே ஷேர் செய்திருந்தனர்.

தமிழர்களின் உணவில் கீரைக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் முருங்கைக் கீரையை அதிகம் பேர் விரும்பி சாப்பிடுகின்றனர். மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு முருங்கைக் கீரை தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சூழலில், முருங்கைக் கீரையால் புற்றுநோய் வந்ததது, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது கண்டறியப்பட்டது என்று பொருள்தரும் வார்த்தை பிரயோகமும் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதுவே இந்த கட்டுரையை அதிக அளவில் ஷேர் செய்யக் காரணமாக இருந்தது. கட்டுரை வெளியான 15 மணி நேரத்தில், 152 பேர் ஷேர் செய்திருந்தனர். 156 பேர் லைக்ஸ் செய்திருந்தனர்.

கட்டுரையில், யாருக்கு, எங்கே, எப்போது புற்றுநோய் வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள், எந்த ஆய்வில் இது வெளியாகி இருக்கிறது என்று படித்துப்பார்த்தோம். ஆனால், கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் முருங்கைக் கீரையால் புற்றுநோய் வந்தது என்று சொல்லப்படவில்லை. கட்டுரை முழுக்க முழுக்க முருங்கைக் கீரையில் மகத்துவத்தை சொல்லும் வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக புற்றுநோய்க்குக் கூட முருங்கைக் கீரை தீர்வு அளிக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது.

முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்பாடு பற்றி எழுதிவிட்டு, தலைப்பைத் தவறாக வைத்திருப்பது புரிந்தது. 

இந்த கட்டுரை தொடர்பாக கூகுளில் தேடியபோது இதேபோன்ற ஒரு கட்டுரை வெளியானது தெரியவந்தது.

2018ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி இணைய தளம் ஒன்றில் இந்த கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், அண்மை ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாப்பா…! என்று தலைப்பிட்டுள்ளனர். இதைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றொரு இணையதளம் இந்த கட்டுரையை அப்படியே எடுத்து, முருங்கைக் கீரை புற்றுநோயைக் கூட குணப்படுத்துமாம் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது. கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது இந்த கட்டுரையை அப்படியே எடுத்து தலைப்பை மட்டும் மாற்றி வெளியிட்டுள்ளது இந்த இணையதளம். அப்படி மாற்றியவர்கள் தலைப்பில் புதுமை செய்வதாக நினைத்து தவறான தகவலை அளித்துள்ளனர்.

உண்மையில் முருங்கைக் கீரை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முருங்கைக் கீரை மட்டுமல்ல… அதன் விதை, பூ, வேர் என அனைத்துப் பகுதிகளும் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான என்.சி.பி.ஐ என்ற மருத்துவ ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த பதிவில் உள்ள கட்டுரையில் கூட புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க, முருங்கைக் கீரையை தினமும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டியுள்ளனர்.


இந்த பதிவுக்கு சிலர் தங்கள் கமெண்ட்டை செய்திருந்தனர். அதில், தலைப்பில் உள்ள தவறை சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் பிறகாவது அந்த இணைய நிறுவனம் தலைப்பை சரி செய்து செய்திருக்கலாம். பலர் தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தவறான தலைப்புடனே அந்த செய்தி இணையம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தகுந்த ஆதாரங்கள், ஆய்வு முடிவுகளை வைத்துப் பார்க்கையில் இந்த கட்டுரையின் தலைப்பில் தவறு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. 

முடிவு

கட்டுரையின் தலைப்பில் தவறு இருப்பது நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது நேயர்கள் இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

Avatar

Title:முருங்கைக் கீரையால் புற்றுநோய் வருமா… தலைப்பால் வந்த குழப்பம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False Headline