
‘’குடலிறக்க நோய்க்கு உரிய பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
Vijay Balajiஎனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜனவரி 9, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் எப்படி ஏற்படுகிறது, இதனை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்,’ என்று கூறி சில மருத்துவ முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் ஏராளமான வதந்திகள் பகிரப்படுகின்றன. இதில், அன்றாட மருத்துவ குறிப்புகள் தொடங்கி புதுப்புது விதமான தகவல்கள் ஃபார்வேர்ட் செய்யப்படுவதால், எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் சமூக ஊடக பயனாளர்கள் குழப்பமடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா, பொய்யா என தெரியாமல் அதனை பலர் நம்பி ஷேர் செய்கின்றனர்.
எனவே இதுதொடர்பாக நாம் முதலில், மூலிகை ஆராய்ச்சியாளர் – மரிய பெல்சின் அவர்களிடம் விளக்கம் கேட்டோம். இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள விவரங்களை படித்து பார்த்தவர், ‘’இயற்கை மருந்துகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால், இந்த பதிவில் சற்று மிகைப்படுத்தி கூறியுள்ளனர். இதனை முழுதாக நம்பி எதுவும் செய்ய முடியாது,’’ என்றார்.

புகைப்படம்: மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்.
இதுதொடர்பாக, அவர் சித்த மருத்துவரிடமும் ஆலோசனை மேற்கொள்வதாகக் கூறினார். பிறகு, இயற்கை மருந்துகளை சாப்பிடுவது மட்டுமே குடலிறக்க நோய்க்கு முழு தீர்வு அளிக்கும் என்று சொல்ல முடியாது. யாருக்கு எந்த பிரச்னை என்று கண்டறியாமல் பொதுவாக, இதில் மருத்துவ தீர்வுகளை கூறியுள்ளனர். நோயின் தன்மை, பாதிப்பை பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டார்.
இதுதவிர, நாமும் சில மருத்துவ கையேடுகளை ஆராய்ந்து பார்த்தோம். பொதுவாக, குடலிறக்க நோய் வராமல் தடுக்க வேண்டுமானால் இயற்கை மருந்துகள் உதவலாமே ஒழிய, அது வந்தபின், அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே நிரந்தர தீர்வு தரும் என பல மருத்துவ கையேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் குடலிறக்க நோய் வந்து, உரிய சிகிச்சை தராத காரணத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்.
எனவே, உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ குறிப்புகள் தவிர, சமூக ஊடகங்களில் பகிரப்படும் வேறு எதையும் உண்மை என நம்புவது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என நமது வாசகர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குடலிறக்க நோய்க்கு இயற்கை மருந்துகள் உரிய பலன் தருமா?
Fact Check By: Pankaj IyerResult: False
