மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி

சமூக ஊடகம்

‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

செப்டம்பர் 16, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், மலேசிய போலீசில் பணிபுரியும் பெண்கள் சிலரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மலேசியாவில் அடித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

இதே தகவல் வாட்ஸ்ஆப்பிலும் பகிரப்படுகிறது. இந்த புகைப்படத்துடன், மேலும் ஒரு வீடியோவை அந்த வாட்ஸ்ஆப் தகவலில் இணைத்துள்ளனர். 

இதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்தபோது, பெண் ஒருவரை கைகளை கட்டிப் போட்டு அடித்தேக் கொல்லக்கூடிய கொடூரமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்வதால், இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கொடூரமானதாக இருப்பதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து, நமது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
முதலில், இந்த வீடியோ எங்கே நிகழ்ந்தது என்பது தொடர்பான ஆதாரம் எதுவும் கிடைக்கிறதா என தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை இந்தியாவில் நிகழ்ந்த சம்பவம் என்று கூறி தகவல் பகிர்ந்ததையும் கண்டோம். 

பிறகு, இது மலேசியாவில் நிகழ்ந்ததா, இந்தியாவில் நிகழ்ந்ததா என்ற குழப்பத்தில் நாமும் இணையதளத்தில் தகவல் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பின், இது பிரேசில் நாட்டில் நிகழ்ந்த கொடூரமான செயல் என்றும், இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று இவ்வாறான கொடூரத்தை அரங்கேற்றி, அதனை குரூரமாகச் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதுபற்றி Documenting Reality என்ற இணையதளம் தகவல் பகிர்ந்துள்ளது.

Documentingreality.com Link 

மேலும் ஒரு செய்தி லிங்கையும் கீழே இணைத்துள்ளோம். 

Hoodsite.com Link 

இதன்படி, இந்த பெண்ணின் பெயர் Thalia Torres de Souza என்றும், அவரை பிரேசில் நாட்டைச் சேர்ந்த கடத்தல் குழு ஒன்று கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளதாக, தெரிகிறது. 

cn7.com Link

இதற்கடுத்தப்படியாக, மலேசிய பெண் போலீஸ் பற்றிய புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி தகவல் தேடினோம். அப்போது, கடந்த ஒரு வாரமாக இந்த தகவல் பரவி வருவதை தொடர்ந்து, மலேசிய போலீசார் இதனை மறுத்துள்ளதாக, விவரம் கிடைத்தது.

குறிப்பிட்ட வீடியோ மலேசியாவில் நிகழ்ந்தது அல்ல என்றும், மலேசிய பெண் போலீசார் சிலரது புகைப்படங்களை தவறாக பயன்படுத்திச் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றும் மலேசிய போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

NewStraitsTimes Link Bernama Link Malaymail Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) மலேசிய போலீசில் பணிபுரியும் பெண்கள் யாரும் இவ்வாறு கொலை செய்யப்படவில்லை.

2) கடந்த ஒரு வார காலமாக பகிரப்படும் இந்த வதந்தியின் பேரில், மலேசிய போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

3) பிரேசில் நாட்டில் பெண்களை கடத்திச் சென்று கொல்வதை சிலர் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர். அந்த வீடியோதான் மேலே நாம் கண்ட வீடியோ ஆகும். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False