திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா?

அரசியல் தமிழ்நாடு

‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது பற்றி விமர்சித்த காமராஜர்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஜூலை 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் ஜெயித்தபோது, தலைவர் காமராஜர் சொன்னது.. நாட்டை கூத்தாடி கிட்ட கொடுங்க, அவன் கூத்தியாகிட்ட கொடுப்பான்.. கூத்தியா கொள்கை கும்பலிடம் கொடுப்பா.. கொள்ளை கும்பல் நாட்டை அடகு காரனிடம் கொடுப்பான். தலைவர் சொன்னது,’’ என்று எழுதியுள்ளனர்.

காமராஜர் பெயரை பயன்படுத்தியுள்ளதால், இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
காமராஜர், கருணாநிதி போன்றோர் பற்றி வித விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் புதுசு புதுசாக பரவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்பதுதான் நிதர்சனம். அப்படி பரவி வரும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவலும்.

ஆம், மேலோட்டமாக யோசித்தாலே உண்மை எளிதில் விளங்கும். அதாவது, திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர் எம்ஜிஆர் கிடையாது. அப்போதுதான் அதிமுக தொடங்கிய காலம். எனவே, 1973ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் மாயத்தேவர் என்பவரை எம்ஜிஆர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 2வது இடம் பெற்றார். 

Wikisource Link I Vikatan Link

இதன்பிறகு, எம்ஜிஆர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக பதவியேற்றது 1977ம் ஆண்டுதான். ஆனால், அதற்கு முன்பாகவே, காமராஜர் 1975, அக்டோபர் 2 அன்று உயிரிழந்துவிட்டார்.

எனவே, எம்ஜிஆர் திண்டுக்கல் தேர்தலில் வென்றதும், காமராஜர் கடுமையாக விமர்சித்தார் என்று சொல்வது தவறாகும். அந்த தேர்தலில், எம்ஜிஆர் கட்சியை சேர்ந்த மாயத்தேவர் என்பவர்தான் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக, அதிமுக மீது விமர்சனம் கொண்டிருந்தவர்தான் காமராஜர்.

ஆனால், காமராஜரின் ரசிகராக கருதப்பட்டவர் எம்ஜிஆர். அண்ணா இருந்த காலத்தில், அவர் திமுகவா, காங்கிரசா என்ற சர்ச்சை கூட எழுந்தது உண்டு. 

Dinamani News Link

இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விசயம், எம்ஜிஆர் 1962ம் ஆண்டிலேயே சட்டமன்ற மேலவை (எம்எல்சி) உறுப்பினராகவும், பிறகு 1967ம் ஆண்டில் திமுக சார்பாக, எம்எல்ஏ பதவியும் வகித்திருக்கிறார். அப்போது காமராஜர் உயிருடன்தான் இருந்தார். ஆரம்பத்தில், காங்கிரஸ் ஆதரவாளராகவும், பின்னாளில் திமுக ஆதரவாளராகவும் இருந்தவர்தான் எம்ஜிஆர்.

இதுதவிர, எம்ஜிஆர் கட்சி திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், அவர்களே வருங்காலத்தில் ஆளுங்கட்சியினராக மாறுவார்கள் என்றெல்லாம் காமராஜர் கணித்திருக்க வாய்ப்பில்லை.

காமராஜர், ராஜாஜி போன்றோர் இறந்த பிறகே, காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வலுவிழந்தது. தவிர, திமுக அசைக்க முடியாத கட்சியாகவும் அப்போது வளர்ந்திருந்தது. அந்த இடத்தை எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக விரைவிலேயே பிடிக்கும் என்று காமராஜர் நினைத்துப் பார்த்தே இருக்க மாட்டார் என்பதுதான் யதார்த்தம். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர், காமராஜர் இடையே ஏதேனும் வார்த்தைப் போர் நிகழ்ந்திருக்கலாம். அதனைச் சிலர் கூடுதல் தகவல் சேர்த்து பகிர்ந்து வருவதாகவே, தோன்றுகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) திண்டுக்கல் இடைத்தேர்தல் என்பது மக்களவைத் தொகுதிக்காக நடந்ததாகும். சட்டமன்ற தேர்தல் இல்லை.

2) திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டவர் மாயத்தேவர். எம்ஜிஆர் இல்லை.

3) எம்ஜிஆர் 1977ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்றபோது, காமராஜர் உயிருடன் இல்லை. அவர் 1975ம் ஆண்டில் உயிரிழந்துவிட்டார்.

4) ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தான் எம்ஜிஆர். பிறகுதான், திமுகவில் இணைந்தார். பின்னாளில் தனிக்கட்சியும் தொடங்கினார்.

5) திமுகவில் இருந்தபோதே, எம்எல்ஏ மற்றும் எம்எல்சி பதவிகளை எம்ஜிஆர் வகித்துள்ளார். அப்போதும் அவர் சினிமா நடிகர்தான். எனவே, அவர் அதிமுக தொடங்கிய பிறகே தேர்தலில் வெற்றி பெற்றார் எனக் கூற முடியாது.

6) காமராஜர் மீது மரியாதை கொண்ட நபராக, நெருங்கிய நட்பு கொண்டவராகவே எம்ஜிஆர் இருந்துள்ளார். எனவே, அவரை காமராஜர் விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் ஏதேனும் வார்த்தைப் போர் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அதற்காக, திண்டுக்கல் இடைத் தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார் என்று கூறுவது தவறான தகவல்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா?

Fact Check By: Panakj Iyer 

Result: Partly False