
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும், என்று ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கும் – மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை RSS தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sivalingam K Siva என்பவர் 2020 செப்டம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரண்ட் ஆனதைத் தொடர்ந்து தமிழ் பற்றி, தமிழுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பற்றி பல்வேறு பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் கூறாத ஒன்றை அவர் புதிய தலைமுறை பெயரில் வெளியிட்டுள்ளனர்.
இது வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஃபாண்டில் இல்லை, பின்னணி டிசைன் அழிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் இது போலியானது என்று நமக்கு தெரிந்தது. இருப்பினும் பலரும் இதை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதால், இது போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரத்தைத் தேடினோம்.

முதலில் அசல் நியூஸ் கார்டை தேடினோம். இந்த நியூஸ் கார்டில் 2020 செப்டம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், அந்த தேதியில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.
அப்போது, “சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது – மு.க.ஸ்டாலின். தேசிய குற்ற ஆவண அறிக்கையை சுட்டிக்காட்டி மாநில அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு” என்று வெளியான நியூஸ் கார்டு கிடைத்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வதந்தி பரப்பியிருப்பது தெரிந்தது.

இரண்டாவதாக, புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், “இது வழக்கமான போலியான நியூஸ் கார்டுதான். நாங்கள் வெளியிட்டது இல்லை” என்று உறுதி செய்தார்.
முன்பு எப்போதாவது இப்படி ஸ்டாலின் பேசினாரா என்று கூகுளில் தேடிய போது அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, தி.மு.க தரப்பை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, ‘’இப்படி பேசவில்லை. இது தவறான தகவல்” என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது.. அங்கே போய் பார்க்கவும்..