இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி எச்.ராஜா விமர்சித்ததாக பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

இந்தியை எதிர்ப்பவர்களின் பெற்றோர் பற்றி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்ததாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச் ராஜா. ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த ஹிந்துக்கள் யாரும் ஹிந்தியை எதிர்க்கமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை கறுப்பர் கூட்டம் 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கருப்பன் அறிவழகன் என்பவர் செப்டம்பர் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அதிரடியாக பேசக் கூடியவர்தான். ஆனாலும், இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. எச்.ராஜா இந்த கருத்தை கூறிவிட்டதாக பலரும் அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நியூஸ் கார்டை பிரபல திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

Twitter LinkArchived Link

இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்ட் ஆனது. அதன் பிறகு எச்.ராஜா இது பற்றி ஏதும் இந்தி மொழி பற்றி பேட்டி அளித்தாரா என்று பார்த்தோம். அப்படி எதுவும் அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எச்.ராஜா ட்வீட் எதுவும் வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தபோது அதிலும் எதுவும் இல்லை. oredesam.in என்ற இணைய ஊடகம் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதாக பதில் உள்ளது. எனவே, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்படி ஏதும் நியூஸ் கார்டு உள்ளதா என்று பார்த்தோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. அதன் இணையதளத்திலும் இந்தி பற்றி எச்.ராஜா கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே, இது தொடர்பாக கருத்தறிய எச்.ராஜாவைத் தொடர்புகொண்டோம். நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை. குறுந்தகவல் அனுப்பினோம். அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு பொறுப்பாளர் எஸ்.என்.பாலாஜியைத் தொடர்புகொண்டு சமூக ஊடகங்களில் பரவும் தகவல் குறித்து தெரிவித்தோம். அவருடைய வாட்ஸ் அப் நம்பருக்கு இந்த நியூஸ் கார்டையும் அனுப்பினோம். 

இது போலியான நியூஸ் கார்டு என்று கூறிய அவர், இது தொடர்பாக எச்.ராஜாவிடம் பேசிவிட்டு வருவதாக கூறினார். சிறிது நேரம் கழித்து தொடர்புகொண்டு கேட்ட போது, “இது போலியானது. எச்.ராஜா இவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்தார். விஷமத்தமனாக போலியான தகவலை பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்.

இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி எச்.ராஜா விமர்சித்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •