
சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நான்கு பேரை சட்ட போராட்டம் நடத்தி வெளியே கொண்டு வர நிதி உதவி செய்யும்படி சீமான் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீமான் பெயரிலான ட்வீட் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நம் எளிய தமிழ்ப் பிள்ளைகள் நால்வர் சிறைக் கொட்டடியில் அடைபட்டிருக்கின்றனர். அவர்களை சட்டப் போராட்டம் நடத்தி மீட்க உலகெங்கிலும் தாய்த்தமிழ் உறவுகள் தாராளமாக உதவவேண்டும். இலக்கு ஒன்றே இனவிடுதலை” என்று குறிப்பிட்டு நிதி உதவி செய்வதற்கான இணைய இணைப்பும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Srinivasan N என்பவர் 2021 ஜூன் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருச்சியில் கார் பழுது நீக்கும் மையத்தை நடத்தி வந்தவரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருடன் நாம் தமிழர் கட்சியின் வினோத், சந்தோஷ், சரவணன் ஆகியோரும் கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர் மீது தி.மு.க நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து புகார் அளிக்கவே, வெவ்வேறு வழக்குகளில் அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாட்டை முருகன் மற்றும் இதர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெளியே எடுக்க நிதி உதவி செய்யும்படி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில் சீமானின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் அப்படி ஒரு ட்வீட் இல்லை. நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். கைது செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலும் நிதி உதவி செய்யுங்கள் என்று குறிப்பிடவில்லை. இப்படி வெளிப்படையாக நிதி உதவி கேட்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரு வேளை அவர் ட்வீட் போட்டுவிட்டு அகற்றிவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுந்தது.
Archive I naamtamilar.org I Archive 2
இது தொடர்பாக செய்தி எதுவும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. உண்மையில் சீமான் இப்படி ட்வீட் செய்திருந்தால் அதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கும். அவர் அதை அகற்றியிருந்தாலும் அதையும் செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் ஒரு சின்ன பெட்டிச் செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை.
நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் நிதி உதவி பக்கத்தில் தொலை பேசி எண் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம். அந்த செல்போன் எண் நாம் தமிழர் கட்சியின் செயற்களம் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளரும், மாநில ஐ.டி விங் செயலாளராகவும் உள்ள ஜெகன்னாதனுக்கு உரியது என்று தெரிந்தது. அவருக்கு இந்த ட்வீட் பதிவு பற்றி விவரத்தை தெரிவித்தோம். வாட்ஸ் அப்பில் இந்த ட்வீட்டை அனுப்ப முடியுமா என்று அவர் கேட்க, அவருக்கு அதை அனுப்பி வைத்தோம்.
பின்னர் நம்மிடம் பேசிய அவர், “கட்சியைப் பொறுத்தவரை இந்த மாதிரி பணம் கேட்டு அறிவிப்பு வெளியிட மாட்டார்கள். கட்சி மீது மக்கள் மத்தியில் கெட்டப்பெயரை உருவாக்க இப்படி போலியாக ட்வீட் வெளியிட்டுள்ளனர். சீமான் அவர்களின் அறிக்கைகள் எல்லாம் கட்சி இணையதளத்தில் வெளியாகும். அது போல முக்கிய அறிவிப்புகளும் இணையதளத்தில் வெளியாகும். அதில் இல்லை என்றாலே மற்றது எல்லாம் போலியானது என்று உறுதி செய்துகொள்ளலாம். இந்த ட்வீட் பதிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டது இல்லை” என்றார்.
இதன் மூலம் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிதி உதவி செய்யும்படி கேட்டு ட்வீட் வெளியிட்டார் என்று பகிரப்படும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை வெளியே எடுக்க சட்டப் போராட்டம் நடத்த நிதி உதவி செய்யுங்கள் என்று சீமான் கேட்டதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Title:சிறையில் உள்ள நாம் தமிழர் கட்சியினரை வெளியே எடுக்க நிதி உதவி கேட்டாரா சீமான்?
Fact Check By: Chendur PandianResult: False
