கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

சமூக ஊடகம் தமிழகம்

இந்த ஆண்டு கொரோனா தேர்வால் வெற்றி பெற்ற மாணவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

சிறுவன் ஒருவர் பொருட்களை எடை போடும் இயந்திரத்தில் அரிசியை எடைபோடுவது போல உள்ளது. எடை பார்க்கும் இயந்திரம் பற்றித் தெரியாமல் அதன் மீதே அரிசி கிண்ணத்தை வைத்துவிட்டு, அதிலிருந்து பிளாஸ்டிக் பைக்குள் அரிசியை எடுத்துப் போடுகிறான். எடை கூடவும் இல்லை குறையவும் இல்லை என்பதால் என்ன பிரச்னை என்று புரியாமல் சிறுவன் விழிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “இந்த ஆண்டில் கொரோனாவால் தேர்வு பெற்ற மாணவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை K7 Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு காரணமாக 2020ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. கல்லூரியில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிலும், அரியர்ஸ் பாடங்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்கள் பாஸ் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரியர்ஸ் பாடங்கள் பாஸ் என்பதை ஏற்க முடியாது என்று ஏ.ஐ.சி.டி.இ கூறிவிட்டதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதாமல் வெற்றி பெற்றதால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது, அவர்களுக்கு வேலையே கிடைக்காது என்று சமூக ஊடகங்களில் பலரும் சாபம்விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு சாதாரண எடை போடும் விவரம் கூட தெரியவில்லை என்பது போல சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம்.

இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிகிறது. எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று மோடி மற்றும் நிர்மலா சீதாராமனிடம் பயிற்சி பெற்றவர் என்று இதே வீடியோவை ஓராண்டுக்கு முன்பு 2019 செப்டம்பர் 26ம் தேதி ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

மேலும், “நிம்மி அக்கா பொருளாதாரத்தை நிமிர்த்திய போது எடுத்த வீடியோ… ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது…” என்று இதே வீடியோவை அப்போதே தமிழக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது. 

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கிண்டல் செய்யும் வகையில் இந்த வீடியோ ஓராண்டாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளதை காண முடிகிறது.

who.intArchived Link

2020 ஜனவரி முதல் வாரத்தில்தான் சீனாவின் வூகானில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் பரவல் தொடங்கியது. மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன் பிறகுதான் தேர்வு நடைபெறாத சூழல் காரணமாக அனைவரும் தேர்ச்சி அறிவிப்புகள் வெளியாகின.

எனவே, இந்த நபர் கொரோனா காரணமாக தேர்ச்சி பெற்ற மாணவர் என்று கூறுவது தவறானது ஆகும். விளையாட்டாக, நகைச்சுவைக்காக போட்டிருந்தாலும் கூட பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் இது தவறான தகவல் என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False