
‘’மீத்தேன் திட்டம் தொடர்பாக திமுக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மேற்குறிப்பிட்ட செய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம்.
அப்போது, நிறைய பேர் இந்த தகவலை கடந்த 2019ம் ஆண்டு முதலாக ஷேர் செய்யும் விவரம் தெரியவந்தது.

‘’மீத்தேன் திட்டத்தை திமுகவே கையெழுத்து போட்டு தொடங்கியது, நாங்கள் மத்தியில் நிர்பந்திக்கவில்லை,’’ என்று ராகுல் காந்தி சொன்னதாக, இதில் குறிப்பிட்டுள்ளனர்.
திமுகவின் கூட்டணி கட்சி என்பதால், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் காலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற காலக்கட்டத்தின் போது இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்திருக்கின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் நமது வாசகர் அனுப்பி வைத்த நியூஸ் கார்டு உண்மையா என்ற ஆய்வு செய்தோம். அதனை பார்த்தால், நியூஸ் கார்டு யார் அனுப்பியது என்றே அதில் லோகோ எதுவும் குறிப்பிடவில்லை.
எனவே, சந்தேகத்தின் பேரில், நியூஸ் 7, புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் ஆன்லைன் பிரிவில் விசாரித்தோம். ஆனால், இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை, என்று அவர்கள் மறுத்துவிட்டனர். இது ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு போல இல்லை. பார்ப்பதற்கு, யாரோ சமூக ஊடக பயனாளர் வேண்டுமென்றே தயாரித்த நியூஸ் கார்டு என்றே தெரிகிறது.

இதுதவிர, ராகுல் காந்தி எங்கேனும் இப்படி பேசியதாக செய்திகள் எதுவும் வெளியாகியுள்ளதா என தகவல் தேடினோம். நீண்ட நேரம் தேடியும், இப்படியான செய்தி ஒன்றும் காணக் கிடைக்கவில்லை.
மாறாக, மீத்தேன் திட்டம் தொடர்பாக திமுக தெரிவித்த சில வாக்குறுதிகள் பற்றிய செய்திகளே காணக் கிடைத்தன.
தமிழகம் மட்டுமல்ல, மத்தியிலும் சரி. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாகவே செயல்பட்டு வருகின்றன. இருவரும் எந்த விசயத்திலும் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்ளாமல் ஒற்றுமையாகவே செயல்படுகிறார்கள்.
அப்படியிருக்கும் சூழலில், இதுபோல ராகுல் காந்தி திமுகவை வேண்டுமென்றே குற்றஞ்சாட்டி பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், இந்த வதந்தி பரவ தொடங்கிய காலக்கட்டம் 2019 மார்ச் – ஏப்ரல் ஆகும். அப்போது, மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன.
அதேசமயம், காவிரி டெல்டா படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது, திமுக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததும் உண்மைதான். இதனை திமுக தரப்பிலும் யாரும் மறுக்கவில்லை. ‘’உண்மை விவரம் தெரியாமல் ஆய்வுப் பணிகள் செய்ய அனுமதி அளித்தோம். இனி வரும் காலத்தில் இதனைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்,’’ என்றே திமுகவினர் கூறிவருகின்றனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட செய்தி கடந்த 2019 மார்ச் முதலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்போது, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற காலக்கட்டமாகும். திமுகவும், காங்கிரசும் கூட்டணி கட்சிகள் என்பதால், வாக்காளர்களை திசைதிருப்பும் நோக்கில் சிலர் இதனை பரப்பியுள்ளனர்.
2) தங்களுடன் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ள திமுகவை ராகுல் காந்தி இப்படி வெளிப்படையாக விமர்சித்துப் பேசியதாக செய்தி ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
3) இப்படியான செய்தி எதுவும் வெளியானதா என நியூஸ் 7, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களிலும் விசாரித்து பார்த்ததில், இல்லை என்றே தகவல் கிடைத்தது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:மீத்தேன் திட்டத்தை தொடங்கியது திமுக.,தான் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
