இ.ஐ.ஏ பற்றி பேசியதால் பத்மபிரியாவை பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக பரவும் விஷம பதிவு!
இ.ஐ.எ சட்டத்தின் கேடுகளைப் பற்றி வீடியோ வெளியிட்ட இளம் பெண் பத்மபிரியாவின் கன்னத்தில் பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இ.ஐ.ஏ 2020 திருத்தம் பற்றிய வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆன பத்மபிரியா பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பெண்ணின் கன்னம் பழுக்க அரைவிட்ட #பிஜேபி ஆதரவாளன்...!!! EIA 2020 சட்டத்தின் கேடுகளை மக்கள் மத்தியில் #விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்ணிற்கு நேர்ந்த அவலம்...!!! இது தமிழ்நாடுதானா..?? (அல்லது) வடமாநிலமா..?? இந்த சமூக விரோதிகளை அடக்காமல் அதிமுக ஆட்சி சுதந்திரமாக நடமாட விடுவது ஏன்..??" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Sridhar என்பவர் 2020 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்தம் தொடர்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பத்மபிரியா என்ற பெண் வெளியிட்ட வீடியோ. அவருடைய வீட்டு முகவரியை எல்லாம் கேட்டுக் கொந்தளித்தனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். பயம் காரணமாக அந்த பெண் தன்னுடைய பழைய வீடியோக்கள் பலவற்றை அழித்தும் விட்டார். பின்னர் அவர் மீண்டும் பழையபடி வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். என்னை தனிப்பட்ட முறையில் தாக்காதீர்கள், என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று துணிவுடன் வீடியோக்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் அவரைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. அதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்ட வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், "இனி எந்த பெண்ணையும் பார்த்து போமான்னு சொல்லாதீங்க, பொத்திபொத்தி வளக்காதீங்க. சுடிதாருக்கும், சாரிக்கும், ஜீன்ஸ்க்கும் டாப்சுக்கும் என்ன வித்தியாசம். கடைசியில மிஞ்சினது இது மட்டும்தான் (கன்னத்தைக் காட்டுகிறார்). பொண்ணை அடக்க ஒடுக்கமா இருன்னு சொல்றதே விட, பசங்களை அடக்க, ஒடுக்கமா வளங்க. எல்லா ஆண்களையும் குத்தம் சொல்லலை. ஆம்பளைங்களை குற்றம் சொல்லல... இப்படி பண்றவன் எவனும், ஆம்பளையே இல்ல.
ரோடுல ஒரு பொண்ணுக்கு, இப்படி ஒன்னு நடந்துட்டா.. சுத்தி இருக்கிறவன், அவன் மேலே அடிச்சிடுவானான்னு, விலகி போறீங்களே? உங்க வீட்டு பொண்ணு மேல, யாராவது இப்படி அடிச்சிட்டு போனால், விட்டுடுவீங்களா? பொம்பளைங்களையும்தான் கேட்கிறேன். விட்டுடுவீங்களா? இது ஆண்களுக்கான ரெஸ்பான்சபிளிட்டி மட்டும் இல்ல... பெண்களுக்|குமான ரெஸ்பான்சிபிலிட்டியும் கூடத்தான். இனிமே உங்களுக்கு அப்யூஸ் நடந்துச்சுன்னா, தைரியமா வெளியில சொல்லுங்க. உங்க ஃபிரெண்ட்ஸ், ஃபேமிலிகிட்ட சொல்லுங்க. கம்ப்ளெய்ண்ட் பண்ணுங்க... முடியலையா, நேர்ல போய் அடிச்சி நொருக்குங்க. மறைக்காதீங்க... மனசுல மறைச்சா கடைசியில உங்களுக்கு இப்படித்தான் நடக்கும். இனி என்ன ஆசிட் அட்டாக் சர்வைவர்னு எனக்கு அவார்டு கொடுப்பாங்க, மீம் போடுவாங்க. ட்ரால் பண்ணுவாங்க... அவ்வளவுதான். அவன் அங்க ஹேப்பியா இருப்பான். சிந்தியுங்கள் மக்களே, இனி எந்த பெண்ணுக்கும் இது நடக்கக் கூடாது" என்று சொல்கிறார்.
வீடியோவில் அவரே ஆசிட் வீச்சில் தப்பிய பெண் என்று சொல்கிறார். எந்த இடத்திலும் அவர் தன்னை பா.ஜ.க நிர்வாகி அடித்தார் என்று கூறவில்லை. மேலும், இந்த வீடியோ பல மாதங்களாகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. இது பற்றி நமக்கும் கூட பல முறை புகார் வந்துள்ளது. ஆனால், விழிப்புணர்வு வீடியோ என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அந்த வீடியோவை எடுத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பற்றி பத்மபிரியா பேசிய பிறகு மிகவும் பிரபலமான நபர் ஆகிவிட்டார். அவர் தாக்கப்பட்டிருந்தால் அது பெரிய செய்தியாகி இருக்கும். எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களில் இறங்கியிருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு சம்பவமும் தமிழகத்தில் நடக்கவில்லை.
அதே நேரத்தில் பத்மபிரியா டிக்டாக்கில் சென்னை தமிழச்சி என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு வந்தார். டிக்டாக் தடை செய்யப்பட்டு விட்டதால் அவருடைய டிக்டாக் பக்கத்தில் அசல் வீடியோவை கண்டறிய முடியாத நிலை. அவருடைய யூடியூப் பக்கத்திலும் பல வீடியோக்கள் அகற்றப்பட்டு இருந்தன. அழகு குறிப்பு தொடர்பான வீடியோக்கள் மட்டுமே இருந்தன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போது ஆசிட் வீச்சு தொடர்பான வீடியோ நமக்கு கிடைத்தது. 2019 அக்டோபர் 1ம் தேதி அவர் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், இது வெறும் நடிப்புதான்… விழிப்புணர்வுக்கான வீடியோ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 2019 அக்டோபர் மாதம் 3ம் தேதி இதே வீடியோவை வேறு சிலர் பதிவேற்றம் செய்து ஷேர் செய்து வந்திருப்பதையும் காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில்,
வீடியோவில், பத்மபிரியா ஆசிட் வீச்சில் தப்பிப்பிழைத்தவர் என்று கூறுகிறார். எந்த இடத்திலும் பா.ஜ.க ஆதரவாளர் அடித்தார் என்று கூறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை பத்மபிரியா 2019 அக்டோபர் 1ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பத்மபிரியா தாக்கப்பட்டது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில் பழைய வீடியோவை எடுத்து விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:இ.ஐ.ஏ பற்றி பேசியதால் பத்மபிரியாவை பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக பரவும் விஷம பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False