உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "3000 கோடி ரூபாய்க்கு சிலை வைத்த ஆட்சியாளர்களின் ஆளுமை? உ.பியில் ஒரு பள்ளிக்கூடத்தின் நிலையை பாரீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Maya G என்பவர் 2020 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குழந்தைகள் படத்தைப் பார்க்கும் போது இவ்வளவு மோசமான நிலையில் பள்ளிகள் உள்ளனவே என்ற வருத்தம் எழுந்தது. இந்த பள்ளி இந்தியாவில் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிசர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உள்பட பலரும் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியிருப்பது தெரியவந்தது. அந்த ஆய்வுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு படம் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்தோம்.

பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தனர். இவற்றுக்கு நடுவே இந்த புகைப்படம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் எடுக்கப்பட்டது என்ற வகையில் பதிவிடப்பட்டு இருந்து.

Facebook LinkArchived Link

இது தொடர்பான ஃபேஸ்புக் பதிவை பார்த்தபோது, புகைப்படம் மட்டுமே இருந்தது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த படத்தை வெளியிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து செயல்படுவது தெரிந்தது.

Archived Link

இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது ட்வீட் பதிவு ஒன்று கிடைத்தது. அதில் "தெற்கு பஞ்சாப்பில் வாரா செஹ்ரானில், லய்யாவில் உள்ள பெண்கள் ஆரம்ப பள்ளியின் நிலை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. வேறு எந்த ஒரு உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.

siasat.pkArchived Link

siasat.pk என்ற இணையதளத்தில் பஞ்சாப்பில் உள்ள பெண்கள் ஆரம்பப் பள்ளியின் நிலை என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இப்படி நமக்கு கிடைத்த பதிவுகள், செய்திகள் எல்லாம் இந்த புகைப்படம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.
குழந்தைகளின் தோற்றமும், உடை எல்லாம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளி குழந்தைகளைப் போலவே உள்ளது. இதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியின் நிலை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சகதியில் அமர்ந்திருக்கும் பள்ளிக் குழந்தைகள்; உ.பி-யில் எடுத்த படமா இது?

Fact Check By: Chendur Pandian

Result: False