
‘’கோவை மக்கள் கொரோனா தடுப்பூசி வேண்டுமெனில் மோடியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்,’’ என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.
தகவலின் விவரம்:

இதில், Gandeebam என்ற ஃபேஸ்புக் ஐடி பகிர்ந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதில், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவிந்திரன், கோவை மக்கள் கொரோனா தடுப்பூசி வேண்டுமெனில், மோடியிடம் நேரடியாகப் பேசி வாங்கிக் கொள்ளுங்கள், என்று கூறியதாக, குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் அவ்வாறு நேரடியான அர்த்தத்தில் பேசவில்லை. சமீபத்தில் அவர் தந்தி டிவி நடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார்.
அந்த விவாத நிகழ்ச்சியின் முழு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் இடையே, சரியாக 22.21வது நிமிடத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்தது. அப்போது, ‘’மத்திய அரசு தரப்பில் தரப்பட்ட 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழ்நாடு அரசு சரியாக பயன்படுத்தாமல் உள்ளது,’’ என்று பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் குற்றஞ்சாட்டி பேசினார்.

இதற்கு, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவிந்திரன் பதில் அளித்துப் பேசுகையில், ‘’மத்திய அரசு அளித்துள்ள தடுப்பூசிகளை மாநில அரசு உரிய முகாம்களுக்கு அனுப்பியுள்ளது,’’ என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட கே.டி.ராகவன், ‘’கோவை மக்கள் கதறுகின்றார்கள்,’’ என்று கூற, உடனே கான்ஸ்டன்டைன், ‘’கோவையில் மக்கள் கதறினால் அதை மோடிக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் எல்லோருக்கும் சரியாகவே வழங்கி வருகிறோம். யாரையும் புறக்கணிக்கவில்லை. அப்படி கோவை மக்களை நாங்கள் புறக்கணிப்பதாக நினைத்தால், சம்பந்தப்பட்ட மக்களையே மோடியிடம் வாட்ஸ்ஆப்பில் பேச சொல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமே முக்கியம் என்று நினைத்துச் செயல்பட முடியாது. நீங்கள் தேவையானதை செய்ய தவறியதால்தான் இந்த நிலைமை வந்தது,’’ எனக் கூறுகிறார்.
அதாவது, கே.டி.ராகவனுக்குப் பதில் அளித்தே கான்ஸ்டன்டைன் இவ்வாறு பேசியுள்ளார். அதனை எடுத்து, அவர், கோவை மக்களை பார்த்து நேரடியாக, இப்படி கருத்து கூறினார் என்று தவறான பொருளில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோவை மக்கள் மோடியிடம் கோவிட் 19 தடுப்பூசி கேளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
