மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

BJP 2.png
Facebook LinkArchived Link

பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், 347 தொகுதிகளில் இ.வி.எம் முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ். நடுக்கத்தில் மோடி அரசு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shahul Hameed என்பவர் 2019 டிசம்பர் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கூட பாரதிய ஜனதாவோ அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சியோ முறைகேடு செய்து வெற்றிபெற்றது என்று கூறவில்லை. அப்படி இருக்கும்போது, பாரதிய ஜனதா 347 தொகுதிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது என்று பரவும் தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியான டிசம்பர் 21 அல்லது அதற்கு முன்பாக வேறு ஏதாவது வழக்கு பதிவானாதா அல்லது பழைய செய்தியைத்தான் குறிப்பிடுகிறார்களா என்று கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். பாரதிய ஜனதா முறைகேடு செய்து வெற்றிபெற்றது என்று நிரூபிக்கப்பட்டது என்று செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

பழைய செய்தியில், 347 தொகுதிகளில் முறைகேடு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்களா, அந்த செய்தியைத்தான் திரித்து வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்ய அந்த பழைய செய்தியைப் பார்த்தோம்.

டெலிகிராப் நாளிதழ் வெளியிட்டிருந்த அது தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. அதில் 347 தொகுதிகளில் குளறுபடி என்று குறிப்பிட்டுள்ளனர். அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரைட்ஸ் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை மூத்த வழக்கறிஞர் பிரஷாத் பூஷன் தாக்கல் செய்திருந்தார். மை வோட் டர்ன் அவுட் என்ற தேர்தல் ஆணையத்தின் ஆப் மூலம் பதிவான வாக்குகள் கிடைத்தன. மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடந்தது. அதில் ஆறு கட்ட தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மட்டுமே வழங்கப்பட்டது. கடைசிக் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவிகிதமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த புள்ளிவிவரம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான புள்ளிவிவரங்களை வைத்து எங்கள் வல்லுனர் குழு ஆய்வு செய்தது. 

அதில் 543 தொகுதிகளில் 347 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் வித்தியாசங்கள் இருப்பது தெரிந்தது. சில தொகுதிகளில் ஒரு வாக்கு முதல் 101,323 வாக்கு வரை வேறுபாடு இருந்தது காண முடிந்தது.

BJP 3.png
telegraphindia.comArchived Link

அதிலும் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மற்றும் விசாகபட்டினம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக், ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி, ஒடிஷாவில் கோராபுட், உத்தரப்பிரதேசத்தின் மச்சிலீஷர் என ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும் அவருக்கு அடுத்து வந்தவருக்குமான வாக்கு வித்தியாசத்தைவிட இந்த பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தது தெரியவந்துள்ளது. எங்கள் ஆய்வில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இதனுடன் தொடர்பு உள்ளது என்று கண்டறியவில்லை. எனவே, இது குறித்து விரிவான தகவல் வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டோம். ஆனால், தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. 542 தொகுதிகளுக்குமான சரியான வாக்குப் பதிவு எண்ணிக்கையை கேட்டும் அளிக்காமல் உள்ளனர். எங்கள் ஆய்வின் அடிப்படையில் வாக்குப் பதிவு பற்றிய சரியான கணக்கு இல்லாமலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் அனைத்து தகவலையும் அளிக்க வேண்டும். நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியதாக இருந்தது.

எந்த இடத்திலும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் முறைகேடு செய்து 347 தொகுதிகளில் வெற்றிபெற்றது என்ற இந்த செய்தியில் குறிப்பிடவில்லை. ஒருவேளை வழக்கை தாக்கல் செய்த தன்னார்வ நிறுவனம் இது பற்றி ஏதும் குறிப்பிட்டுள்ளதா என்று அதன் இணையதளத்துக்கு சென்று தேடினோம். அதில், அவர்கள் தாக்கல் செய்த மனுவை வெளியிட்டிருந்தார்கள். அதைப் படித்துப் பார்த்தோம். அதிலும், எந்த இடத்திலும் பாரதிய ஜனதா கட்சியை குற்றம்சாட்டவில்லை. மேலும், எந்த ஒரு கட்சிக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று நாங்கள் கூறவில்லை என்று தெளிவாக கூறியிருந்தனர். 

BJP 4.png
adrindia.orgArchived Link

நம்முடைய ஆய்வில் 

347 தொகுதிகளில் பதிவான வாக்குகள் பற்றிய விவரத்தில் வித்தியாசம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சில தொகுதிகளில் ஒரு வாக்கு முதல் சில தொகுதிகளில் ஒரு லட்சம் வரை வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாக வழக்கைத் தொடர்ந்த தன்னார்வ நிறுவனம் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

347 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றவருக்கும் இரண்டாவதாக வந்தவருக்கம் இடையேயான வாக்கு வித்தியாசம் அளவைக் கடந்து பதிவான வாக்குகளில் பற்றிய தகவலில் வித்தியாசம் இருந்ததாக இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டது என்று கூறவில்லை, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவித்ததில் குளறுபடி என்றே குறிப்பிட்டுள்ளது.

தன்னார்வ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் எந்த இடத்திலும் பாரதிய ஜனதா கட்சி முறைகேடு செய்து வெற்றிபெற்றது என்று கூறவில்லை.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக நாங்கள் கண்டறியவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 347 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாரதிய ஜனதா வெற்றி பெற்றது உறுதியானது என்று பகிரப்படும் தகவல் உண்மையும் பொய்யும் கலந்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

2 thoughts on “மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

  1. வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு என்றால், பதிவான வாக்குகளைத் தவிர மேலும் கள்ள வாக்குகள் போட்டு மோசடியான முறையில் வெற்றி பெற்றது என்ற கோணத்தை மட்டுமே குறிக்கிறது. மிக எளிமையாக எண்ணிப்பார்த்தாலே இது ஒரு எளிய முறை என்று தெரியும். இந்த வகையில் ஆராய்ந்தால் பாஜக வுக்கு ஆதரவாகவே உண்மை இருப்பதானத் தோற்றம் தான் வெளிப்படும். இந்த வகையில் இது நடுநிலையான அலசல் இல்லை. உண்மை என்னவாக இருக்கும் என்றால் பதிவான வாக்குகளை வாக்குப்பதிவு பொறிகளை மின்னணு ஊடறுப்பு செய்வதன் மூலம் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு போட்டிருக்கலாம்.

Comments are closed.