கோவையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் குண்டுவைக்க திட்டமிட்ட கோயில்கள் லிஸ்ட்! – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!

குற்றம் சமூக ஊடகம்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், கோவையில் ஐந்து கோயில்களில் குண்டு வைக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

குண்டு வைக்க திட்டமிடப்பட்ட கோவில்கள்:

KOVAI ISIS 2.png

Facebook Link

Archived Link

டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குண்டு வைக்க திட்டமிடப்பட்ட கோவில்கள்” என்று ஐந்து கோவில்களின் பட்டியலை அளித்துள்ளனர். அவை…

1) கோணியம்மன் கோவில் ,டவுன்ஹால்

2) மருதமலை முருகன் கோவில்

3) லேடி சர்ச், காந்திபுரம்

4) அனுமன் கோவில்,அவினாசி ரோடு

5) ரத்தின வினாயகர் கோவில்,ஆர்எஸ் புரம்

என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Karthik Govindaraj என்பவர் 2019 ஜூன் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக ஊடகங்களில் நட்பாக இருந்ததாகவும், ஐ.எஸ் பயங்கரவாத கருத்துக்களை அரபி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து அவற்றைப் பகிர்ந்து வருவதாகவும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பி.பி.சி தமிழ் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவர்கள் கோவில், மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட கோவில்கள் என்ற பட்டியலை Karthik Govindaraj என்பவர் பகிர்ந்துள்ளார். இதற்கு ஆதாரமாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தோம். அதில், தாக்குதல் நடத்த திட்டமிட்ட இடங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் டைம்ஸ் நவ் வெளியிட்ட உண்மையான வீடியோவை தேடி எடுத்தோம். ஜூன் 17ம் தேதி இந்த செய்தியை டைம்ஸ்நவ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது. “ஷாக்கிங் ரிப்போர்ட்… இந்து கோவில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியில் எந்த இடத்திலும் இந்த கோவில்களில்தான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என்று குறுிப்பிடவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த செய்தியிலேயே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த வீடியோவும் உள்ளது. அதை தனியாக எடுத்து அளிக்க முடியவில்லை. எனவே, டைம்ஸ் நவ் யூடியூபில் வெளியிட்ட வீடியோவை தேடி எடுத்து கொடுத்துள்ளோம்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போன்று, தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட இடங்கள் பற்றி ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று வீடியோவை ஆய்வு செய்தோம். அந்த வீடியோவில், முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகியோர் மீது ஜூன் 12, 2019 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நமக்கு கிடைத்துள்ளது என்று தெரிவிக்கின்றனர். அதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நிருபர் விளக்குகிறார்.

வீடியோவின் தமிழாக்கம் இதுதான்: “சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities Prevention Act) கீழ் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர்கள். சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த மூன்று பேரும் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது தொடர்பாக… அதாவது இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் உயிரைக் கொடுத்து தாக்குதல் நடத்தியது போன்று உயிர்த் தியாகம் தொடர்பாக அதிகம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ, துண்டுப்பிரசுரம் போன்றவற்றை தங்கள் பகுதியில் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேர் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில்  சில பொருட்கள் கிடைத்ததாக திடுக்கிடும் தகவலை அளித்துள்ளனர். இந்த மூன்று பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கை, பிரசாரங்களை அரபி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தங்களைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் பரப்ப முயன்றுள்ளனர்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் குறிப்பாக கோவில், தேவாலயங்கள் போன்ற இடங்களில் எப்படி குண்டு  வெடிப்பை மேற்கொள்ளலாம் என்றும் என்று தொடர்ந்து விவாதித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் கிடைத்த ஒவ்வொரு தகவலும் இவர்கள் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது என்று விசாரணை அதிகாரி உதயகுமார் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அந்த வீடியோ முடிவடைகிறது.

வீடியோவின் எந்த ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட இடங்கள் இவைதான் என்று எந்த ஒரு இடத்தின் பெயரையும் சொல்லவில்லை.

வேறு ஏதாவது செய்தித்தாள், ஊடகங்களில் இது போன்ற தகவல் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். எல்லா செய்தி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால், எதிலும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட இடங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இது தொடர்பாக தின தந்தி வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

விகடன் வெளியிட்ட செய்தியில், கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளிலிருந்து கம்ப்யூட்டர், டிஸ்க், பென்டிரைவ், சிம், இந்தியாவில் செயல்படும் சில இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் துண்டுப் பிரசுரங்களை மட்டுமே எடுத்துள்ளனர். பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டு எதையும் போலீசார் கைப்பற்றவில்லை என்ற தகவலும் நமக்குக் கிடைத்தது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் மூன்று பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் காப்பியை வெளியிட்டு இருந்தது. அதிலும் எந்த ஒரு இடத்தின் பெயரும் இல்லை.

KOVAI ISIS 3.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுக்குப் பலரும் கமெண்ட் செய்திருந்தனர். பலரும் இந்த தகவல் உண்மை என்று கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அதில் ஒருவர், இது தவறான தகவல்… பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், இந்த பதிவில் எந்த மாறுதலும் இல்லை.

KOVAI ISIS 4.png

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

டைம்ஸ் நவ் செய்தியில் எந்த இடத்திலும் மேற்கண்ட கோவில்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக கூறவில்லை.

எந்த ஒரு செய்தி ஊடகத்திலும் குறிப்பிட்ட இந்த ஐந்து இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறவில்லை.

தவறான தகவல் என்று சிலர் கமெண்ட் செய்திருந்தனர். ஆனாலும், பதிவில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வகையில் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோவையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் குண்டுவைக்க திட்டமிட்ட கோயில்கள் லிஸ்ட்! – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Praveen Kumar 

Result: False